‘விடிவெள்ளி’ பத்திரிகைக்கு ரவூப் ஹகீம் தெரிவித்ததாக போலிச்செய்தி
இது 'விடிவெள்ளி' பத்திரிகையின் முன்பக்க வடிவமைப்பை பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்ட செய்தியாகும்.
by Anonymous |
ஆகஸ்ட் 8, 2024
‘சஜித் பிரேமதாச முஸ்லிம்களுக்கு நபியை போன்றவர்’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹகீம் தெரிவித்ததாக இலங்கை முஸ்லிம் சமூகத்தினரின் பிரபல பத்திரிகையான விடிவெள்ளி பத்திரிகையின் முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டது போன்று செய்தியொன்று ‘வட்ஸ்-அப்’ குழுக்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்ததில், இவ்வாறு பகிரப்படும் செய்தியானது விடிவெள்ளி பத்திரிகையின் முன்பக்க வடிவமைப்பை பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்ட செய்தி என்பதை factseeker இனால் உறுதிப்படுத்த முடிந்தது.
விடிவெள்ளி பத்திரிகையின் முன்பக்க வடிவமைப்பை பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்ட இதே செய்தியானது இதற்கு முன்னர் கடந்த 2023ஆம் ஆண்டிலும் பகிரப்பட்டுள்ளது.
இது குறித்து விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் பீடத்திடம் factseeker வினவியபோது, விடிவெள்ளி பத்திரிகையில் இவ்வாறான செய்தியொன்று ஒருபோதும் பிரசுரிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியதுடன், இதற்கு முன்னரும் இதே போலிச்செய்தி பலரால் பகிரப்பட்டதாகவும் விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் தெரிவித்தார்.
மேலும் கடந்த காலங்களில் விடிவெள்ளி பத்திரிகையின் முன்பக்க வடிவமைப்பை பயன்படுத்தி இவ்வாறான போலிச்செய்திகள் பகிரப்பட்டுள்ளதாகவும், அது குறித்து தாம் வாசகர்களுக்கு தெளிவுபடுத்தியதாகவும் அவர் factseeker இடம் தெரிவித்தார்.
Link: https://www.vidivelli.lk/article/9545
ஆகவே விடிவெள்ளி பத்திரிகையின் முன்பக்க வடிவமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹகீம் தெரிவித்ததாக பகிரப்படும் செய்தியானது போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.