வாக்குச்சீட்டு இல்லாமலும் வாக்களிக்கலாம் என பகிரப்படும் தவறான தகவல்

இம்முறை தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதில் அதிக கவனம் செலுத்துமாறு factseeker கேட்டுக்கொள்கின்றது
by Anonymous |
செப்டம்பர் 20, 2024

“வேட்பாளர் பெயர்ப்பட்டியலில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டிருக்குமாயின் வாக்குச்சீட்டு இல்லாமலும் வாக்களிக்க முடியும்” என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக தெரிவித்ததாக செய்தியொன்று இன்று (20.09.2023) வெளியாகியுள்ள வீரகேசரி நாளிதளின் முதற் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18.09.2023) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்ததாக வீரகேசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை அடிப்படையாகக்கொண்டு x தளத்திலும், ஏனைய சமூக வலைதள பக்கங்களிலும் கருத்துக்கள் பகிரப்படுவதுடன், இது குறித்து உண்மையான தகவலை உறுதிப்படுத்துமாறு factseekerஇடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இது குறித்து ஆராய்ந்து பார்த்ததில் வீரகேசரியில் பிரசுரிக்கப்பட்ட செய்தியில் உள்ளதைப்போன்று, அவ்வாறான ஒரு கருத்தினை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயகவோ அல்லது தேர்தல்கள் திணைக்களமோ தெரிவிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. அத்துடன் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உண்மையில் தெரிவிக்கப்பட்ட விடயம் என்ன என்பது குறித்து Newsfirst Tamil ஊடகத்தின் youtube பக்கத்தில் பதிவேற்றியுள்ள காணொளி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Link :https://www.youtube.com/watch?v=d9btCkIm0Sk&t=12s
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அவ்வாறான கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை என்பதுடன், ‘இம்முறை தேர்தலில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இல்லாவிட்டால் தமது வதிவிடப் பகுதியில் உள்ள தமக்குரிய தபால் நிலையத்திற்கு சென்று அதனை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், எனினும் வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய பத்திரம், முதியோர் அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்தும் நிழல்படத்துடனான கடிதம், தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அங்கவீனர்களுக்கான தற்காலிக அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலமாக தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும்’ என்பதையே அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்கலாம் என்பதையே, வாக்குச்சீட்டு இல்லாமலும் வாக்களிக்கலாம் என வீரகேசரி நாளிதழில் தவறாக விளக்கப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன், “வேட்பாளர் பெயர்ப் பட்டியலில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டிருக்குமாயின் வாக்குச்சீட்டு இல்லாமலும் வாக்களிக்க முடியும் ” என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக தெரிவிக்கவில்லை என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.