வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்ததா?
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வ முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
by Anonymous |
டிசம்பர் 12, 2024
அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திலிருந்து அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கவுள்ளதாக செய்திகள் பிரதான ஊடகங்களில் செய்திகளாக வெளிவருவதுடன், இந்தக் காரணி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளதுடன், பல்வேறு கருத்துகளும் விமர்சனங்களும் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.இவ் வாகன இறக்குமதி தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளில் வாகன இறக்குமதியும் நிறுத்தப்பட்டது. இருப்பினும் இவ்வாண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து மூன்று கட்டங்களில் வாகனங்களை இறக்குமதி செய்ய முன்னைய ரணில் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இது குறித்த அமைச்சரவை தீர்மானங்களையும் அவதானிக்க முடிந்தது.
எனினும், தற்போது இதன் நிலவரம் குறித்து போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திரு.நிஷாந்த அனுருத்த வீரசிங்கவிடம் FactSeeker வினவிய போது,வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தால் அது மூன்று கட்டங்களின் அடிப்படையில் மட்டுமே இறக்குமதி செய்யப்படும். அதன் முதல் கட்டமாக பொது போக்குவரத்து (பஸ்) வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் மட்டுமே இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பில் இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே கடந்த ஒக்டோபர் 8 ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்ததுடன், அதில் வாகன இறக்குமதி தொடர்பில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.
https://www.facebook.com/share/v/1BAc72Dd3H/
எனினும், சில முன்னணி வாகன நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டுக்கான வாகன விலைப்பட்டியலை வெளியிட்டதன் காரணமாக 2025 ஆம் ஆண்டில் வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்வது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல பதிவுகள் பகிரப்படுகின்றன.
இது தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில், “எங்களால் வெளியிடப்பட்ட பதிவுகள் அரசின் தீர்மானங்கள் பற்றியதல்ல.இது ஒரு விளம்பர நடவடிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன” என்றும் Toyota Lanka நிறுவனத்தின் அதிகாரிகள் நேர்க்காணல் ஒன்றில் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க மெரெஞ்சிகே, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் எனவும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்பாடு செய்வதற்கு அரசாங்கம் தற்போது இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இது கட்டம் கட்டமாக முறையாக செய்யப்படும் என்றும் முதலில் பஸ் மற்றும் லொறிகளை இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ளதாகவும், இரண்டாவதாக சிறிய ரக கார்கள் மற்றும் வேன்களையும் ஏனைய வாகனங்களை கருத்திற்கொண்டு இறக்குமதி செய்யப்படும் எனவும் இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இருப்பினும் இது தொடர்பில் அரசாங்கம் சரியான முடிவுகளை வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
https://www.facebook.com/share/p/1CaXysbXnp
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, Derana 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, அரசாங்கம் கட்டுப்பாடுகளுடன் இறக்குமதிக்குத் தளர்வு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், இது எல்லாவிதமான வாகனங்களையும் ஒரே நேரத்தில் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்காது என்றும் கூறியுள்ளார்.
https://www.facebook.com/share/r/1DMJ3Jo7uo/
ஆகவே, வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வ முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை என்பதையும் தற்போது சமுக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள விலைப்பட்டியல்கள் விளம்பர நோக்கில் வெளியிடப்பட்டுள்ளன என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.