‘லங்கா’ மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலிச்செய்தி
இந்த செய்தி குறித்து சுகாதார அமைச்சிடம் factseeker வினவியபோது, அவ்வாறான தகவல்கள் எதுவும் சுகாதார அமைச்சிற்கு பதிவாகவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
by Anonymous |
ஜூலை 29, 2024
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 200 மாலத்தீவு பிரஜைகள் ‘லங்கா’ மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், எனவே ‘லங்கா’ மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என்ற பிரசாரமொன்று சமூக வலைதளங்கள் மற்றும் வட்ஸ் -அப் குழுக்களில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
அவ்வாறு பகிரப்படும் பதிவில், “அனைவருக்கும் வணக்கம். ‘லங்கா’ மருத்துவமனைக்கு காலடி எடுத்து வைக்க வேண்டாம். 200 மாலத்தீவியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஏற்கனவே 2-3 பேர் இறந்துவிட்டனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பகிரப்படும் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்கும் விதமாக FactSeeker,’லங்கா’ மருத்துவமனை நிர்வாகத்திடம் இது குறித்து விசாரணை நடத்தியது.
இதன்போது, சமூக வலைதளங்கள் மற்றும் வட்சப் குழுக்களில் இவ்வாறு பகிரப்படும் செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை எனவும், இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்பதையும் உறுதி செய்த மருத்துவமனை நிர்வாகம், அது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
சிறப்பு அறிவிப்பு
எமது வைத்தியசாலையில் பன்றிக் காய்ச்சல் நோயாளர்கள் கண்டறியப்பட்டதாக அல்லது சிகிச்சை அளிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை என ‘லங்கா’ மருத்துவமனை நிர்வாகம் பொது மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறது. இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. முழு ஊடக தெளிவுபடுத்தல் விரைவில் இடம்பெறும்.
– லங்கா’ மருத்துவமனை நிர்வாகம்.
இவ்வாறு, அவ்வறிக்கை தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல், இந்த செய்தி குறித்து சுகாதார அமைச்சிடம் factseeker வினவியபோது, அவ்வாறான தகவல்கள் எதுவும் சுகாதார அமைச்சிற்கு பதிவாகவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
முடிவு :-
ஆகவே, பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 200 மாலத்தீவு பிரஜைகள் ‘லங்கா’ மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், எனவே ‘லங்கா’ மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என வட்ஸ் -அப் மூலமாகவும், சமூக வலைதளங்களிலும் பகிரப்படும் பதிவானது போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.