மியன்மர் நிலநடுக்கம் என்ற தலைப்பில் பகிரப்படும் AI காணொளி

இக் காணொளியை ஆராய்ந்ததில், சில தெளிவற்ற அம்சங்கள் பதிவாகியிருப்பதை அவதானிக்க முடிந்தது.
by Anonymous |
ஏப்ரல் 3, 2025

மியன்மரில் கடந்த வெள்ளிக்கிழமை (28) 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் பெரும் உடைமை சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
இது தொடர்பில் சமூகவலைதளங்களில் பல்வேறு AI காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மியன்மர் நிலநடுக்கம் என்ற தலைப்பில் காணொளி ஒன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
மிகப் பெரிய அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் வீதிகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பது போன்ற காணொளியே இவ்வாறு பகிரப்படுகின்றது. அக் காணொளியை Google Reverse Image மூலம் ஆராய்ந்ததில், இது சர்வதேச அளவில் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. இருப்பினும் இக் காணொளியானது எந்தவொரு உத்தியோகபூர்வ இணையதளங்களிலும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
மேலும், இக் காணொளியை ஆராய்ந்ததில், சில தெளிவற்ற அம்சங்கள் பதிவாகியிருப்பதை அவதானிக்க முடிந்தது. உதாரணமாக இக் காணொளியில் உள்ள வாகனங்கள் தெளிவற்றதாகவும் காணொளியில் உள்ள நபர்களின் முகங்கள் மற்றும் உடல்கள் சேதமடைந்தும் காணப்பட்டன. இதனால் இக் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்டுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதை யூகிக்க முடிந்தது.
இக்காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையா என Deepware முறை மூலம் ஆராய்ந்ததில், இது ‘AI காணொளி’ என்பது தெரியவந்தது.
மேலும், இது குறித்து BBC செய்தித்தளம் வெளியிட்ட செய்தியொன்றில் இக் காணொளி AI Generated காணொளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, மியன்மர் நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற இக் காணொளியானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துகின்றது.