மாணவர்களையும் பெற்றோரையும் அச்சுறுத்தும் இந்தப்பதிவு உண்மையானதா ?
இவ்வாறான அறிவிப்பொன்றை அரசாங்கம் விடுத்திருக்கவோ அல்லது இது குறித்த தீர்மானமொன்றை அமைச்சரவையில் எடுக்கப்படவோ இல்லை.
by Anonymous |
பிப்ரவரி 27, 2024
“இணையதளம் மூலமாக சிறுவர்கள் சீர்கெட்டு செல்வதால் 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் காதல் பாடல்கள் மற்றும் கல்வி சம்பந்தப்படாத நிகழ்ச்சிகள் செய்ய வைக்கும் பெற்றோர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனையும் ரூபாய் ஒரு இலட்சம் அபராதமும் வழங்கப்படுவதுடன் அவ் வீடியோ செய்த சிறுவர்களுக்கு இரண்டு வருட சீர்திருத்தப்பள்ளியும் வழங்கப்படும் ” என்ற பதிவொன்று சமூக வலைதளங்களில் அதிகளவானோரினால் பகிரப்பட்டு வருகின்றது.
அரச இலச்சினையுடன் அரசாங்கம் வெளியிட்டுள்ள ஊடக வெளியீடு எனக்கூறி இந்தப் பதிவை சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றமையை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.
இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இது போலியாக தயாரிக்கப்பட்ட அறிவிப்பு என்பதை கண்டறிய முடிந்தது.
இவ்வாறான அறிவிப்பொன்றை அரசாங்கம் விடுக்கவில்லை எனவும், அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் அமைச்சரவையில் கூட எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் பந்துல குணவர்தன factseekerக்கு உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடகச் செயலாளர் எச்.டி. குஷான் சமீரவிடம் factseeker வினவிய போது, கல்வி அமைச்சினால் அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், இவ்வாறு பகிரப்படும் அறிக்கை போலியானது எனவும் தெரிவித்தார்.
ஆகவே அரசாங்கத்தின் அறிவிப்பு என பகிரப்படும் இந்த பதிவானது போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.