போப் பிரான்சிஸ் பௌத்த மதத்தை தழுவியதாக பகிரப்படும் போலிச் செய்தி

போப் பிரான்சிஸ் பௌத்த மதத்தை தழுவியதாக பகிரப்படும் காணொளி 2024 ஆம் ஆண்டு மதப் பணியின் போது எடுக்கப்பட்ட காணொளி ஆகும்.
by Anonymous |
மார்ச் 7, 2025

சமீப நாட்களாக கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையும் வத்திக்கான் நகரின் தலைவருமான போப் பிரான்சிஸின் உடல் நிலை குறித்து பல்வேறு செய்திகள் சர்வதேச அளவில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், “இறுதியாக புத்தரிடம் தஞ்சம் புகுந்த போப்” என்ற தலைப்பில் காணொளி ஒன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது. போப் பிரான்சிஸ் புத்த துறவிகளுடன் இருப்பது போன்ற காணொளியே இவ்வாறு பகிரப்படு வருகின்றன.
மேலும், இக் காணொளிக்கு கருத்து தெரிவித்த சிலர் “துறவிகள் நோய்வாய்ப்பட்ட போப்பை ஆசீர்வதிக்கிறார்கள்” என்று பதிவிட்டு வருவதையும் அவதானிக்க முடிந்தது.
இக் காணொளி சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதாலும் இதற்கு பலரும் தமது கருத்துக்களை தெரிவித்து வருவதாலும் FacrSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இதற்கமைய, இக் காணொளி குறித்து ஆராய்ந்ததில், இணையத்தளத்திலிருந்து இது தொடர்பாக வெளியாகியிருந்த பல செய்தித் தொகுப்புகளை அவதானிக்க முடிந்தது.
2024 ஆம் ஆண்டு ஒரு மதப் பணியின் போது, தாய்லாந்து புத்த துறவிகள் குழு ஒன்று வத்திக்கான் நகரில் புனித போப் பிரான்சிஸை சந்தித்ததாக இச் செய்தி தொகுப்பைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சந்திப்பின் போது மத மரியாதை செலுத்தல் மற்றும் பாரம்பரிய சடங்குகளை பின்பற்றல் ஆகியவை இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச் செய்திகளில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை அவதானிக்கும் போது, பின்னணியின் காட்சி அமைப்பு, காணொளியில் காணப்படும் துறவிகள், போப்பின் இருப்பிடம் ஆகியவை ஒத்ததாக இருப்பதைக் காணமுடிந்தது. அதன் படி, சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற காணொளி 2024 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட காணொளி என்பதை உறுதிப்படுத்த முடிகின்றது.
https://x.com/EWTNVatican/status/1795099881188601922
ஆகவே, கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையும் வத்திக்கான் நகரின் தலைவருமான போப் பிரான்சிஸ் பௌத்த மதத்தை தழுவியதாக பகிரப்படும் காணொளி 2024 ஆம் ஆண்டு மதப் பணியின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதையும் “துறவிகள் நோய்வாய்ப்பட்ட போப்பை ஆசீர்வதிக்கிறார்கள்” என பதிவிட்டிருந்த கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.