பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல் என வாட்ஸ்-அப்பில் பகிரப்படும் போலிச்செய்தி

அனைத்து பொலிஸ் நிலையங்களிலிருந்தும் அனைத்து பொது மக்களுக்கும் ஒரு அவசர செய்தியென குறிப்பிட்டு, ஒரு செய்தி வாட்ஸ்-அப் மூலம் அதிகமாக பகிரப்படுகிறது.
by Anonymous |
ஏப்ரல் 26, 2024

அனைத்து பொலிஸ் நிலையங்களிலிருந்தும் அனைத்து பொது மக்களுக்கும் ஒரு அவசர செய்தியென குறிப்பிட்டு, ஒரு செய்தி வாட்ஸ்-அப் மூலம் அதிகமாக பகிரப்படுகிறது.
தமது வீட்டு விலாசத்தை கடதாசியொன்றில் எழுதிக்கொண்டு, தாம் தொலைந்துவிட்டதாக கூறிக்கொண்டு வீதிகளில் பிள்ளைகள் நடமாடுவதாகவும், இதனூடாக பல்வேறு குற்றங்களை செய்வதற்காக வேறு நபர்கள் இவர்களை பயன்படுத்திக்கொள்வதாகவும் தெரிவித்தே இந்த செய்தி வாட்ஸ்-அப் மூலம் பகிரப்பட்டு வருகின்றது. அவ்வாறு பகிரப்படும் செய்தி,
” அவசர அறிவிப்பு
அனைத்து பொலிஸ் நிலையங்களில் இருந்து அனைத்து பொதுமக்களுக்கும்,
தங்கள் வீட்டு முகவரியுடன் ஒரு துண்டு காகிதத்தை எடுத்துக்கொண்டு, தாம் தொலைந்துவிட்டதாகக் கூறிக்கொண்டு தெருக்களில் குழந்தைகள் திரிகின்றனர். இந்த குழந்தைகளை நீங்கள் பார்த்தால், எழுதப்பட்ட முகவரிக்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம், ஏனென்றால் உங்களைக் கொல்ல, உங்களிடம் இருக்கும் சொத்து, உறுப்புகளைத் திருட அல்லது உங்களை துஸ்பிரயோகம் செய்ய சிலர் காத்திருக்கிறார்கள். எனவே அவர்களை அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது அருகிலுள்ள அவசர ரோந்து பிரிவுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த செய்தியை சகலருக்கும் பகிருங்கள்,
உள்துறை அமைச்சகம். ”
இவ்வாறு பகிரப்படும் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்தது.
எவ்வாறாயினும் உள்துறை அமைச்சகம் என்ற ஒரு அமைச்சு இலங்கையில் இல்லை என்பதுடன், உள்நாட்டலுவல்கள் அமைச்சை அவ்வாறு அடையாளப்படுத்தியிருக்கலாம் என்ற அடிப்படையில், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் பத்திரிகை அறிக்கைகளை factseeker ஆராய்ந்து பார்த்தது. எனினும், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்திலோ , அல்லது பத்திரிக்கை செய்தியாகவோ இவ்வாறான எந்தவொரு செய்தியையும் அவர்கள் வெளியிடவில்லை.
அத்துடன், இது தொடர்பில் பிரதான ஊடகங்கள் ஏதேனும் செய்தி வெளியிட்டுள்ளனவா எனவும் ஆராயப்பட்டது. எனினும் அவ்வாறான செய்திகள் வெளியிடப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
இந்த அறிவிப்பு தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவியபோது, பொலிஸார் அவ்வாறான அறிவிப்புகள் எதனையும் வெளியிடவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ factseeker இடம் தெரிவித்தார்.
இவ்வாறு பகிரப்படும் செய்தி தொடர்பில் மேலும் ஆராய்ந்து பார்த்ததில், இது 2022 ஆம் ஆண்டில் ஆங்கில மொழியில் வேறு சில நாடுகளில் பகிரப்பட்டுள்ளது என்பதையும் factseeker இனால் கண்டறிய முடிந்தது.
அவ்வாறு ஆங்கிலத்தில் பகிரப்பட்ட செய்தியையே சிங்கள மொழிபெயர்ப்பாக மாற்றப்பட்டுள்ளதுடன், இவ்வாறு பகிரப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் Factseeker உறுதிப்படுத்துகிறது.