பேராயர் மால்கம் ரஞ்சித் ஆண்டகையை வத்திக்கான் புறக்கணிப்பதாக பகிரப்படும் போலிச்செய்தி

‘எசன’ செய்தித்தளத்தில் வெளியாகியதை போன்று திரிபுப்படுத்தப்பட்ட புகைப்படமே இவ்வாறு பகிரப்படுகின்றது.
by Anonymous |
ஏப்ரல் 24, 2025

பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, கொழும்பு பேராயர் மால்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள இந்நிலையில், “பேராயர் மால்கம் ரஞ்சித் அரசியலில் ஈடுபட்டதால், அவரை தமது எதிர்கால நடவடிக்கைகளில் புறக்கணிக்க வத்திக்கான் முடிவெடுத்துள்ளதாக” புகைப்படத்துடனான பதிவொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

‘எசன’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியாக இது சமூக வலைதளங்களில் பகிரப்படுவதால் அது குறித்து factseeker ஆராய்ந்து பார்த்தது.
‘எசன’ செய்தித்தளத்தில் இச் செய்தி வெளியாகியுள்ளதா என FactSeeker ஆராய்ந்ததில், அவ்வாறான எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. ஆனால், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படத்துடன் ஒத்த புகைப்படத்தில், பேராயர் மால்கம் ரஞ்சித் வத்திக்கானுக்குப் பயணித்த செய்தியே அந்த செய்தித்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இது குறித்து இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடக பணிப்பாளர் பாதிரியார் ஜூட் கிருஷாந்திடம் FactSeeker வினவியத்தில், “சமூக வலைதளத்தில் பகிரப்படுகின்ற அந்த செய்தியில் எந்தவொரு உண்மையும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
ஆகவே, பேராயர் மால்கம் ரஞ்சித் அரசியலில் ஈடுபட்டதால், அவரை எதிர்கால நடவடிக்கைகளில் புறக்கணிக்க வத்திக்கான் முடிவெடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதையும் ‘எசன’ செய்தித்தளத்தில் வெளியாகியதை போன்று திரிபுப்படுத்தப்பட்ட புகைப்படமே இவ்வாறு பகிரப்படுகின்றது என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            