பேராசிரியர் மெத்திகா விதானகே சஜித் தரப்புடன் இணைந்ததாக போலிச்செய்தி

நான் சஜித் பிரேமதாசவை தனது வாழ்நாளில் சந்தித்ததில்லை : பேராசிரியர் மெத்திகா விதானகே
by Anonymous |
செப்டம்பர் 5, 2024

“ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் மெத்திகா விதானகே, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குகிறார்” என்ற பதிவுடனான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுடன் பேராசிரியர் மெத்திகா விதானகே கை குலுக்குவதைப் போன்ற புகைப்படமே இவ்வாறு பகிரப்படுகின்றது.

இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயும் விதமாக பேராசிரியர் மெத்திகா விதானகேவிடம் factseeker வினவிய போது, “நான் சஜித் பிரேமதாசவை தனது வாழ்நாளில் சந்தித்ததில்லை” என்றும் “இந்த பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் போலியானது” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இப்புகைப்படம் 28.03.2024 அன்று தேசிய அடிப்படை ஆய்வுகள் நிறுவனத்தின் ஆராய்ச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிந்தது. இப்புகைப்படம் தேசிய அடிப்படை ஆய்வுகள் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ facebook பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Link : https://www.facebook.com/share/kJRifbZoXw9L26UU/
மேலும், இது குறித்து ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஊடக பிரிவினரிடம் factseeker வினவிய போது இச் செய்தியில் உண்மையில்லை எனவும், இவ்வாறான எந்தவொரு சந்திப்பும் நடைபெறவில்லை எனவும் உறுதிப்படுத்தினர்.
ஆகவே, பேராசிரியர் மெத்திகா விதானகே, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குகிறார் எனக் கூறும் பதிவுகள் போலியானவை என்பதையும் அப் பதிவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் திரிபுப்படுத்தப்பட்ட புகைப்படம் என்பதையும் factseeker உறுதிப்படுத்துகிறது.

 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            