புகையிரதத்தில் ‘ மசாஜ் சேவை’ குறித்து எழுந்த சர்ச்சையின் பின்னணி

இலங்கையில் புகையிரத திணைக்களத்தினால் புதிதாக மசாஜ் சேவை ஆரம்பிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பதிவுகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.
by Anonymous |
மார்ச் 5, 2025

கடந்த ஜனவரி மாதத்தில் “இலங்கையில் புகையிரத திணைக்களத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்பா மசாஜ் சேவை” என்ற பதிவுடன் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இக் காணொளிக்கு பலர் தமது கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். சிலர் இக் காணொளி குறித்து உண்மை தன்மையை ஆராய வேண்டும் என தெரிவித்திருந்ததால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
https://puthiyakural.lk/2025/01/17/what-country-is-this-in-408
https://www.facebook.com/share/v/1XaKSaxXvh/
https://www.facebook.com/share/v/1C8ufnfG6U/
https://www.facebook.com/share/v/1ADnWcaLM1/
https://www.facebook.com/share/v/1ABSGdbrBL/
https://www.instagram.com/tv/DE5pj3_tA1N/
கடந்த ஜனவரி 17 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது குறித்து வினவிய போது, “புகையிரதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர்வாசிகள் மசாஜ் செய்வதை போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. இது இலங்கை போக்குவரத்து திணைக்களத்தினால் இயக்கப்படும் புகையிரதத்தில் இடம்பெற்ற சம்பவம் இல்லை” என இலங்கை புகையிரத திணைக்கள பொது மேலாளர் ஜே.ஐ.டி. ஜெயசுந்தர தெரிவித்திருந்தார்.
மேலும், “ஓர் இலங்கையர் மற்றும் புகையிரத துறையின் ஊழியர் என்ற முறையில் இந்த சம்பவத்தை நான் மிகவும் அவமானகரமானதாகக் கருதுகிறேன். இந்த சம்பவம் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் இயக்கப்படும் வழக்கமான பயணிகள் புகையிரதத்தில் நடக்கவில்லை. மாறாக ஒரு தனியார் பயண நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிறப்பு புகையிரதத்தில் நடந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் இலங்கை புகையிரத திணைக்கள பொது மேலாளர் தெரிவித்திருந்தார்.
மேலும், இலங்கை புகையிரத திணைக்கள பொது மேலாளரிடம் இது குறித்து வினவிய போது, இது குறித்து எந்தவொரு தகவலும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும் மேலதிக தகவல்களை பெற எழுத்துப்பூர்வ கோரிக்கையை புகையிரத திணைக்களத்திற்கு சமர்ப்பிக்குமாறும் தெரிவித்தார். 21.01.2025 அன்று FactSeeker அனுப்பிய கோரிக்கைக்கு, ரயில்வே துணை கண்காணிப்பாளர் ஐ.எல்.டி.சி. குணசேகரன் பதிலளித்தார், இதன் மூலம் இச்சம்பவத்தின் பின்னணி சுருக்கமாக விளக்கப்பட்டது.
15.01.2025 அன்று பிலிமத்தலாவையிலிருந்து கொழும்புக்கு சென்ற புகையிரதம், ஒரு தனியார் நிறுவனம் முன்பதிவு செய்த சிறப்பு புகையிரதமாகும். புகையிரதம் அல்லது புகையிரத பெட்டியை ஒதுக்க ரயில்வே துணைப் பொது மேலாளர் (வணிகம்) அலுவலகத்திற்கு குறைந்தது 3 வாரங்களுக்கு முன்பாக எழுத்துப்பூர்வ கோரிக்கை அளிக்க வேண்டும். அந்த வகையிலேயே இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த சிறப்பு புகையிரததிற்கு கூடுதல் சேவைகள் எதுவும் வழங்கப்படவில்லை, பயணத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மசாஜ் செய்ததில் பயணிகள் இருக்கைகள் எதுவும் சேதமடையவில்லை, எனவே இழப்பீடு இல்லை. மேலும், இப் புகையிரத பெட்டிகளை மசாஜ் சேவைக்குப் பயன்படுத்த அனுமதி அளிக்கவில்லை என்று புகையிரத திணைக்களம் உறுதிப்படுத்தியது.
ஆகவே, சமூகவலைதளங்களில் குறிப்பிட்டது போன்று இலங்கையில் புகையிரத திணைக்களத்தினால் புதிதாக மசாஜ் சேவை எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை என்பதையும் அப் பதிவுகள் உண்மைக்கு புறம்பானவை என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது. மேலும், காணொளியில் இடம்பெற்ற சம்பவம் உண்மையாக இருந்தாலும், அது வழக்கமான பயணிகள் புகையிரதத்தில் நடந்த சம்பவம் அல்ல, மாறாக சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட புகையிரதத்தில் நடந்த சம்பவம் என்பதையும் FactSeeker உறுதிப்பதுடுகிறது.