பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தெரு நாய்களை அகற்றும் முடிவு எடுக்கப்பட்டமை உண்மையே

இதுபோன்ற செயற்பாடுகள் முந்தைய வெளிநாட்டு தலைவர்களின் விஜயங்களின் போதும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
by Anonymous |
ஏப்ரல் 4, 2025

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கொழும்பு நகரில் உள்ள தெரு நாய்களை அகற்றும் முடிவுக்கு எதிராக, விலங்குகள் நலனுக்காக செயற்படும் அமைப்பின்னர் நேற்று (03) கொழும்பில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர்.
இது தொடர்பாக பல காணொளிகள் மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. எனவே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்தச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து FactSeeker ஆராய்ந்தது.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பதிவுகளில், இது சமூக நீதி சார்ந்த நடவடிக்கை எனக் கூறப்படுவதுடன், நாய்களை அகற்றும் நடவடிக்கையின் போது அவற்றை கொல்லும் செயல் இடம்பெற்றால் அது தவறானது எனவும், இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதேவேளை, பிரதமர் மோடியின் வருகையை காரணமாகக் கொண்டு தெரு நாய்களை அகற்றும் முடிவு, கொடூரமானதும் தேவையற்றதுமாகும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து விலங்குகள் நலனுக்காக செயற்படும் அமைப்பான Animal Welfare Forum-இன் உறுப்பினர் கிஹான் தினுஷ்காவிடம் FactSeeker வினவிய போது, சுதந்திர சதுக்கம் வளாகத்தில் நாய்கள் அகற்றப்படுவதைக் காட்டும் காணொளி பகிரப்பட்டதையடுத்து, கொழும்பு மாநகர சபையை தொடர்புகொண்டோம். அப்போது நாய்கள் பிடிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதை மாநகர சபை உறுதிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த நடவடிக்கைகள் மோடியின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில், கொழும்பு மாநகர சபையிடம் FactSeeker வினவிய போது, எந்தவொரு வெளிநாட்டு தலைவரும் இலங்கைக்கு விஜயம் செய்யுமிடத்து, தெரு நாய்கள் அகற்றப்படுவது நீண்ட காலமாக நடைபெறும் நடைமுறை எனவும், தடுப்பூசி செலுத்தப்படாத நாய்கள் மூலம் ஹைட்ரோபோபியா (Rabies) பரவலாம் என்பதால் அவற்றை அகற்றுவது சட்டத்திற்கு உட்பட்டது எனவும் கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணாயக்கார தெரிவித்தார்.
இந்திய பிரதமரை வரவேற்கும் நிகழ்வு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற உள்ளதால், அந்தப் பகுதியில் உள்ள தெரு நாய்கள் அகற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆகவே, கொழும்பு நகரில் தெரு நாய்கள் அகற்றப்பட்ட சம்பவம் உண்மையானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது. மேலும், இந்த நடவடிக்கைகள் மோடி வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இதுபோன்ற செயற்பாடுகள் முந்தைய வெளிநாட்டு தலைவர்களின் விஜயங்களின் போதும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை FactSeeker தெளிவுபடுத்துகிறது.