பாடசாலை கல்வியில் இருந்து அழகியல் பாடம் நீக்கப்படாது
சந்தேகங்களை எழுப்பும் அறிக்கைகள் மற்றும் பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தி வெளியிடப்படும் பொய்யான அறிக்கைகளை கல்வி அமைச்சு முழுமையாக நிராகரிக்கின்றது.
by Anonymous |
ஜூலை 16, 2024
பாடசாலைகளில் கற்பிக்கப்படும் அழகியல் பாடத்தை நீக்குவதற்கான பிரேரணைகளை அதிகாரிகள் தயாரித்துள்ளதாக பாடசாலைகளை காப்பாற்றும் மக்கள் இயக்கத்தின் செயலாளர் நாகஸ்தன்னே அருண தேரர் தெரிவித்ததாக இன்று (16.07.2024) மௌபிம ( Mawbima) சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
“பாடசாலைகளில் இருந்து அழகியல் பாடத்தை நீக்க முன்மொழிவு – பாடசாலைகளை காப்பாற்றும் இயக்கம் கூறுகிறது” என்ற தலைப்பில் மௌபிம( Mawbima̕) சிங்கள பத்திரிகை இச் செய்தியை பிரசுரித்துள்ளது.
புதிய கல்விச் சீர்திருத்த முன்மொழிவுகளின் பிரகாரம் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், ஒழுக்கமும் பொறுமையும் கொண்ட மனிதனை உருவாக்க அழகியல் பாடம் அவசியமானதென நாகஸ்தன்னே அருண தேரர் தெரிவித்துள்ளதாகவும் அச் செய்தியில் கூறப்படுகின்றது.
இச் செய்தியின் உண்மைத்தன்மையை அறிய Factseeker கல்வி அமைச்சிடம் வினவியபோது, அந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என்பதை கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பொதுக் கல்வியில் அழகியல் பாடம் இன்றியமையாத பகுதியாகும். இளநிலை, இடைநிலைக் கல்வி மற்றும் முதுநிலைக் கல்வியில் அழகியல் பாடங்களை மேலதிக தெரிவாகப் படிக்கலாம் என்றும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சையில் அழகியல் பாடங்களில் மாணவர்கள் தோற்றலாம் என்றும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உத்தேச புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் சந்தேகங்களை எழுப்பும் அறிக்கைகள் மற்றும் பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தி வெளியிடப்படும் பொய்யான அறிக்கைகளை கல்வி அமைச்சு முழுமையாக நிராகரிப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.