நிகழ்நிலை காப்பு சட்டத்தை நீக்குவது உறுதியென அமைச்சர் விஜித கூறினாரா?
கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு தடையாக இருக்கும் வாசகங்களை அகற்றி 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை திருத்துதல் என்பதே தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
by Anonymous |
நவம்பர் 6, 2024
“நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை நீக்குவது உறுதி – அரசாங்கம்” என்ற தலைப்பில் செய்தியொன்று ‘வீரகேசரி’ மற்றும் ‘வெற்றி’ஆகிய செய்தி தளங்களில் வெளியாகியுள்ளதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
• https://www.virakesari.lk/article/198016
• https://www.facebook.com/photo?fbid=1023843923089679&set=a.808302004643873
வீரகேசரி இணைய தளத்தில் வெளியாகிய செய்தியில், “நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை நீக்கும் கொள்கையில் எமது அரசாங்கம் உறுதியாகவுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து FactSeeker ஆராய்ந்த போது, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த காணொளியை அவதானிக்க முடிந்தது.
காணொளி: https://youtu.be/rSKVi0s4irE?t=2590
அக் காணொளியில் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு விஜித ஹேரத் பின்வருமாறு பதிலளித்தார்,
“நிகழ்நிலை காப்பு சட்டத்தை திருத்துவோம் என எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அடுத்த பாராளுமன்றம் கூடியவுடன் இந்த நடவடிக்கைகள் இடம்பெறும். எதிர்வரும் காலங்களில் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்போம். ஆனால்,இப்போது எமது கொள்கையுடன் நாம் இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், அமைச்சர் விஜித ஹேரத் கூறியபடி தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதா என ஆராய்ந்த போது, “சுதந்திரமான வெகுசன ஊடகத் தொழில்” என்ற தலைப்பின் கீழ் “கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு தடையாக இருக்கும் வாசகங்களை அகற்றி 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை திருத்துதல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, நிகழ்நிலை காப்பு சட்டத்தை நீக்கும் கொள்கையில் எமது அரசாங்கம் உறுதியாகவுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்ததாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.