‘நான் பிரதமராவேன்’ என ரவி கருணாநாயக்க கூறியதாக போலிச்செய்தி

இலங்கையின் சிங்கள தேசிய பத்திரிகை ஒன்றின் முதற்பக்க தலையங்கத்தை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டு அந்த பதிவு பகிரப்பட்டு வருகின்றது.
by Anonymous |
ஆகஸ்ட் 5, 2024

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், தான் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவொன்று பகிரப்பட்டு வருகின்றது.
“ரணில் ஜனாதிபதியான பின்னர் நானே பிரதமர் -ரவி கருணாநாயக்க கூறுகிறார்” என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், இலங்கையின் சிங்கள தேசிய பத்திரிகை ஒன்றின் முதற்பக்க தலையங்கத்தை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டு அந்த பதிவு பகிரப்பட்டு வருகின்றது.
ஆகவே, இதன் உண்மைத்தன்மை குறித்து Factseeker ஆராய்ந்தபோது, சமீபகாலமாக சிங்கள பிரதான தேசிய பத்திரிகைகளில் இவ்வாறானதொரு தலைப்புச் செய்தி வெளியாகவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இது தொடர்பில் Factseeker ரவி கருணாநாயக்கவிடம் வினவியபோது, இவ்வாறான கருத்துக்கள் எதனையும் தான் முன்வைக்கவில்லை, சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்தப் பதிவு போலியானது எனத் தெரிவித்ததுடன், இவ்வாறான போலியான பிரசாரங்களை செய்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஆகவே, ரணில் ஜனாதிபதியான பின்னர் நானே பிரதமர் என ரவி கருணாநாயக்க தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் போலியானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.