நாட்டின் மொத்த கையிருப்பு குறித்து பிரதி அமைச்சர் நளின் ஹேவகே கூறிய பொய்யான தரவுகள்

அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்த வேளையில் நாட்டின் மொத்த கையிருப்பு 5.8 பில்லியன் அளவில் காணப்பட்டது.
by Anonymous |
ஏப்ரல் 8, 2025

காலி மாவட்டத்தில் கடந்த 07.04.2025 அன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக தலைமையில் தேசிய மக்கள் சக்தியினர் நடத்திய மக்கள் சதிப்பின்போது பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, நாட்டின் மொத்த கையிருப்பு குறித்து கருத்தொன்றை பதிவு செய்திருந்தார். இதன்போது அவர் கூறியதானது ” நாம் ஆட்சிக்கு வரும்போது திறைசேரியில் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவான நிதியே இருந்தது.ஆனால் இப்போது 6190 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இருக்கின்றது’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.
https://www.facebook.com/share/v/1FPMJWMsJV/
இது குறித்து நேற்று (08.04.2025)பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டி.பி.சானக, நாட்டின் மொத்த கையிருப்பு தொடர்பில் பிரதி அமைச்சர் நளின் ஹேவாகே கூறிய தரவுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்ததுடன் மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கை குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார்.
https://www.youtube.com/live/dWE_rIS8mN4?si=OlL1fZPo8sxCqZmb&t=16947
இது குறித்து factseeker கவனம் செலுத்தியதுடன், மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கையினை அவதானிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வேளையில் நாட்டின் கையிருப்பு எவ்வளவு என்பது குறித்தும் தற்போது அது எவ்வாறு அதிகரித்துள்ளது என்பது குறித்தும் அவதானிக்க முடிந்தது.
இறுதியாக இலங்கையில் ஜனாதிபதி தேர்தலானது கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெற்றதுடன் அத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக ஜனாதிபதியாக தெரிவானார். ஆகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த செப்டெம்பர் மாதம் நாட்டின் மொத்த கையிருப்பு எவ்வளவு இருந்தது என்பதை ஆராய்ந்த போது, இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கு அமைய கடந்த 2024 செப்டெம்பர் மாதம் நாட்டின் மொத்த கையிருப்பானது 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது ஆறாயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த ஆண்டுகளில் இருந்து தற்போது வரையில் நாட்டின் கையிருப்பு குறித்த முழுமையான தரவுகளும் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் அவதானிக்க முடிகின்றது.
மேலும் நாட்டின் கையிருப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்திருந்த காணொளியொன்றையும் factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
https://youtu.be/BSWcMy2nFq0?si=XpcQp_OdQlJiRdj8
இந்நிலையில் நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையை அடிப்படையாக வைத்தே பதில் கூறியிருந்தார். அந்த பதிலிலும் தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வேளையில் நாட்டின் மொத்த கையிருப்பு 5.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவில் இருந்ததாகவும் தற்போது அது 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வேளையில் திறைசேரியில் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவான நிதியே இருந்ததாகவும் தற்போது அது 6190 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது எனவும் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே கூறிய கருத்து உண்மைக்கு புறம்பானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.