நாட்டின் தலைமைத்துவம் கட்சியின் பொதுச் செயலாளருக்கே கிடைக்கும் என டில்வின் தெரிவித்ததாக போலிச்செய்தி
Newsfirst இன் சின்னத்துடன் பகிரப்படும் இந்த செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை
by Anonymous |
செப்டம்பர் 4, 2024
ஜனாதிபதியாக யாரை நியமித்தாலும் நாட்டின் தலைமைத்துவம் கட்சியின் பொதுச் செயலாளருக்கே கிடைக்கும் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்ததாக பதிவொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இந்தப் பதிவு குறித்து Factseeker ஆராய்ந்து பார்த்ததில், இந்தப் பதிவானது கடந்த 02.09.2024 அன்று Sirasa newsfirst மூலம் வெளியிடப்பட்ட ஒரு பதிவாக பகிரப்படுவதை அவதானிக்க முடிந்தது,
எனினும், 2024.09.02 அன்றோ அல்லது அந்த வாரத்தில் எந்தவொரு தினத்திலோ newsfirst.lk ஊடக வலையமைப்பிற்குச் சொந்தமான எந்தவொரு சமூக வலைதளக் கணக்கிலும் அல்லது இணைய பக்கத்திலும் இந்தப் பதிவு வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.
இது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவிடம் factseeker வினவியபோது, இது போலியான சமூக வலைதளப் பதிவு எனவும், இவ்வாறான கருத்துக்களை தான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஆகவே, newsfirst இன் சின்னத்துடன், ஜனாதிபதியாக யாரை நியமித்தாலும் நாட்டின் தலைமைத்துவம் கட்சியின் பொதுச்செயலாளருக்கே கிடைக்கும் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்ததாக பகிரப்படும் பதிவானது போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.