நடிகர் விஜய் இலங்கை வந்ததாக போலிச் செய்தி பகிரப்படுகின்றது

நடிகர் விஜய் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக பதிவிட்டுள்ள குறித்த காணொளியை சமூக தளங்களில் அதிகளவானோர் பகிர்ந்துள்ளனர்
by Anonymous |
ஜனவரி 10, 2024

தென்னிந்திய முன்னணி நடிகர் விஜய் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் உத்தியோகபூர்வமற்ற அறிவிப்பொன்று வெளிவந்திருந்த நிலையில் சமூக வலைதளங்களில் இது குறித்த பதிவுகள், காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விஜய் இலங்கைக்கு வந்துள்ளதாக காணொளியொன்று முகநூல் பக்கத்திலும், எக்ஸ் பக்கத்திலும் அதிகளவில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

நடிகர் விஜய் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக பதிவிட்டுள்ள குறித்த காணொளியை சமூக தளங்களில் அதிகளவானோர் பகிர்ந்துள்ளனர். ஆகவே இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில் இந்த காணொளியானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவின் நெல்லை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நேரத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நடிகர் விஜய் பார்க்கச்சென்றபோது பதிவாகிய காணொளி என்பதை கண்டறிய முடிந்தது.

இந்த காணொளியை கடந்த டிசம்பர் 30ஆம் திகதி இந்தியாவின் SS Music தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவேற்றியுள்ளது. இதில் “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நடிகர் விஜய்! ” என்ற தலைப்பில் குறித்த காணொளியை SS Music தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அந்தக் காணொளியின் லிங்க் இங்கே :
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நடிகர் விஜய்! @actorvijay#Thalapathy #ThalapathyVijay #Vijay #Nellai #Floodrelief #ssmusic pic.twitter.com/SBv1hxgl1r
— SS Music (@SSMusicTweet) December 30, 2023
ஆகவே நடிகர் விஜய் இலங்கைக்கு வந்ததாக பகிரப்படும் காணொளியானது நெல்லைக்கு நடிகர் விஜய் சென்றபோது எடுக்கப்பட்ட காணொளி என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.
 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                    