நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

விஜய் நடித்த படங்களை திரையிடுவது இலங்கையில் தடை செய்யப்படுவதாக எந்தவொரு அறிவிப்பும் ஜனாதிபதியினால் பிறப்பிக்கவில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு.
by Anonymous |
ஆகஸ்ட் 28, 2025

இந்திய, தமிழக நடிகர் ஜோசப் விஜய் (தளபதி விஜய்) நடித்த படங்களை இலங்கையில் திரையிட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் செய்தியை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
“தளபதி விஜய்யின் படங்கள் இலங்கையில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது! ஜனாதிபதி அநுர உத்தரவு” என்று எழுதப்பட்ட இந்தப்பதிவை அவதானித்த போது , அது www.Newsfirst.lk என்ற இணையதளத்தில் 25.08.2025 அன்று ‘சிரச நியூஸ் ஃபர்ஸ்டின்’ உத்தியோகபூர்வ அலைவரிசை சின்னத்துடன் வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
செய்தி இங்கே உள்ளது: https://www.facebook.com/share/p/15Be2WfpmNi/?mibextid=wwXIfr
ஆகவே இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராயும் விதமாக சிரச அலைவரிசையின் உத்தியோகபூர்வ பக்கங்களில் ஆராய்ந்த போதும் அவ்வாறான எந்தவொரு செய்தியும் பிரசுரிக்கப்படவில்லை.
இது தொடர்பாக சிரச நியூஸ் ஃபர்ஸ்ட் செய்திப் பிரிவிடம் விசாரித்தபோது, தமது அலைவரிசையிலோ, வலைத்தள பக்கத்திலோ அல்லது சமூக ஊடகப் பக்கத்திலோ இதுபோன்ற செய்தியை வெளியிடவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.
மேலும், ஜோசப் விஜய் நடித்த படங்களை திரையிடுவது இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் விசாரித்தபோது, ஜனாதிபதியினால் அத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கவில்லை என தெரிவித்தனர்.
ஆகவே, நடிகர் ஜோசப் விஜய் (தளபதி விஜய்) நடித்த படங்களை இலங்கையில் திரையிட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி போலியாக தயாரிக்கப்பட்ட ஒன்றாகும் என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.