நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக அஜித் நாரகல நியமிக்கப்பட்டுள்ளார்
by Anonymous |
பிப்ரவரி 1, 2026

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நடிகர் ரஜித ஹிரான் சாமிகர நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே காலமானதை அடுத்து வெற்றிடமாக இருந்த இந்த பதவிக்கு ரஜித ஹிரான் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பதிவுகள் தெரிவிக்கின்றன. ரஜித ஹிரான் ஒரு நிகழ்வில் பல பெண்களை அன்புடன் வரவேற்பது போன்றும், மற்றுமொரு காட்சியில் அவர் அமர்ந்து குறிப்பு எடுப்பது போன்றும் உள்ள வீடியோக்களுடன் இந்தத் தகவல்கள் பகிரப்பட்டன.
இந்தத் தகவல்களுக்கு சமூக வலைதளப் பயனர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளதுடன், சிலர் இதனை உண்மை என நம்பியிருந்தாலும், ஏனையோர் இதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தத் தகவலைச் சரிபார்க்க FactSeeker ஆராய்ந்தது. .
அதற்கமைய நடைபெற்ற நிகழ்வை ஆராய்ந்து பார்த்ததில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக அஜித் நாரகல நியமிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும் அஜித் நாரகல அவர்களின் உத்தியோகபூர்வ facebook பக்கத்திலும் அவர் பதவிப்பிரமாணம் செய்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

link :- https://www.facebook.com/share/1ZfDuPjAnC/?mibextid=wwXIfr
அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நடிகர் ரஜித ஹிரான் சாமிகர நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்ற பதிவொன்றையும் அவர் தனது facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக அஜித் நாரகல நியமிக்கப்பட்டுள்ளதை ஹிரு தொலைக்காட்சி செய்தியிலும் ஒளிபரப்பியுள்ளனர்.
link : https://www.facebook.com/share/v/1DZStRtiQD/?mibextid=wwXIfr
உண்மை நிலவரம்:
பரப்பப்பட்ட வீடியோக்களை ஆய்வு செய்தபோது, அதே நிகழ்வில் நடிகை அனுஷா தமயந்தி மற்றும் நடிகர் அர்ஜுன் கமலநாத் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதைக் காண முடிந்தது. கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நாரகல அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவே தாம் அங்கு வந்ததாக அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். நடிகர் ரஜித ஹிரான் சாமிகரவும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
Link :- https://www.facebook.com/reel/912118631509188/?fs=e&mibextid=wwXIfr
அத்துடன், பரவலாகப் பகிரப்படும் குறித்த புகைப்படத்தில் ரஜித ஹிரான் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுப் புத்தகத்தில் குறிப்பு எழுதுவதைக் காண முடிகிறது. இதுவே அவர் நியமிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவக் காரணமாகியுள்ளது.
மேலதிக விபரங்களை உறுதிப்படுத்துவதற்காக FactSeeker, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்னவைத் தொடர்பு கொண்டது. இதன்போது அஜித் நாரகலவே கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். மேலும், பகிரப்படும் வீடியோக்கள் பிலியந்தலை நகரில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்ட போது எடுக்கப்பட்டவை என்றும் அவர் தெரிவித்தார். அந்த நிகழ்வில் ரஜித ஹிரான் சாமிகர உட்பட பல கலைஞர்கள் கலந்து கொண்டதாக சஞ்சீவ எதிரிமான்ன விளக்கமளித்தார்.
முடிவு:
நடிகர் ரஜித ஹிரான் சாமிகர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் தவறானவை.
