தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு செல்ல இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகிறதா?

"தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு செல்ல வாழ்நாள் இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக" பகிரப்பட்ட பதிவு உண்மைக்கு புறம்பானது.
by Anonymous |
ஜூன் 25, 2025

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு செல்ல வாழ்நாள் முழுவதும் இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

‘Dehiwala Zoo’ என்ற பெயரில் இயங்கும் ஒரு முகநூல் பக்கம் மூலமாகவே இந்த பதிவுகள் பகிரப்பட்டு வருகிறன.
அவ்வாறு பகிரப்படும் பதிவில், ஐந்து நபர்களுக்கு வாழ்நாள் முழுவதற்கான இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இதனைப் பெற “සුභ උපන්දිනයක්” (இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்) என பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து இப்பதிவில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருவதையடுத்து, FactSeeker இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தது.
இது தொடர்பாக தேசிய மிருகக்காட்சிச்சாலை திணைக்களத்தின் விலங்கு சுகாதாரப் பிரிவின் பணிப்பாளர் திரு. துஷாந்தி தம்மிகா தஸநாயக்கவிடம் FactSeeker வினவிய போது, இவ்வாறு எந்தவொரு இலவச நுழைவுச்சீட்டும் வழங்கப்படவில்லை என்றும் இதுகுறித்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதோடு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆகவே, ‘Dehiwala Zoo’ என்ற பெயரில் இயங்கும் முகநூல் பக்கம் போலியானது என்பதையும் அப் பக்கத்தில் “தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு செல்ல வாழ்நாள் இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக” பகிரப்பட்ட பதிவு உண்மைக்கு புறம்பானது என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகின்றது.

 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            