திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

சினோபெக் தொடர்பான ஒப்பந்தம் மார்ச் 2023 இல் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டதுடன், இந்த ஒப்பந்தம் 22.05.2023 அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர ஆகியோரின் தலைமையில் கையெழுத்தானது.
by Anonymous |
ஜூலை 22, 2025

முன்னணி சர்வதேச பெட்ரோலிய நிறுவனமான சினோபெக், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடனேயே இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர கருத்தொன்றை தெரிவித்திருந்தார். அண்மையில் தெரண தொலைக்கட்சியில் இடம்பெற்ற ‘வாதப்பிட்டிய’ அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே அவர் இந்தக் கருத்தினை முன்வைத்திருந்தார். எனினும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏனைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அவரது கூற்று தவறானது என கடுமையாக விமர்சித்திருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவின் இந்தக் கருத்து குறித்து சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதன் காரணத்தினால் அவரது கருத்து தொடர்பில் factseeker ஆராய தீர்மானித்தது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு 14.01.2025 அன்று சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார். இந்தப் விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே 15 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்தது.
https://www.youtube.com/live/e2RZOmHdWFs?si=fkuYBgn7ypjHIa1W&t=263
இதன்போது சினோபெக் நிறுவனத்துடன் கூட்டு முயற்சி ஒப்பந்தமும் கையெழுத்தானது. இது 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் கட்டப்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கான ஒப்பந்தமாகும். ஹம்பாந்தோட்டை பகுதியில் கட்டப்பட உள்ள இந்த சுத்திகரிப்பு நிலையம், 200,000 பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த விஜயத்தின் போது முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து கடந்த 22.01.2025 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் விஜித ஹேரத் விளக்கமளித்திருந்தார்.
https://www.youtube.com/live/qxlyk1z49es?si=LyrqB4gI6VhJ-5FG&t=1043
“ஹம்பன்தோட்டாவில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்டோம். உண்மையில், அந்த திட்டம் இலங்கைக்கு நிறைய அந்நிய செலாவணியை வழங்கும் ஒரு திட்டமாகும். இது ஒரு வெளிநாட்டு முதலீடு. எனவே இது சமீபத்திய காலங்களில் நாங்கள் பெற்ற மிகப்பெரிய முதலீடாகும். இந்தத் திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம், இதன் மதிப்பு 3.7 பில்லியன் டொலர்கள். தற்போது, இந்த சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆனால் இந்தப் பயணத்தின் போது அதன் செயல்பாட்டை விரைவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்.” என அவர் தெரிவித்திருந்தார்.
ஆகவே இது புதிய ஒப்பந்தம் அல்ல என்பது தெளிவுபடுத்துகிறது.மாறாக இந்த திட்டத்திற்கு தேவையான நிலம், நீர் மற்றும் வரிகள் குறித்து ஒரு மாதத்திற்குள் முடிவு செய்யப்படும் என்பதே அமைச்சரினால் கூறப்பட்டிருந்தது.
மேலும், இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகளின்படி, சினோபெக்கின் துணை நிறுவனமான சினோபெக் எனர்ஜி லங்கா பிரைவேட் லிமிடெட், ஏற்கனவே செயல்பட்டு வந்துள்ளது. இருப்பினும், தெரண தொலைக்கட்சியில் 360 நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வியில், அமைச்சர் விஜித ஹேரத், சினோபெக் குறித்து வேறுபட்ட கருத்தை வெளிப்படுத்தினார். ” முந்தைய எந்த அரசாங்கமும் சினோபெக் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்றும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அது செயல்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.”
http://www.facebook.com/sinhala.adaderana.lk/videos/967188495307558/?rdid=b94B7klpT5W6iE79#
அதற்கமைய, இலங்கை அரசாங்கம் சினோபெக்குடன் முன்னர் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எவையென factseeker ஆராய்ந்து பார்த்தது.
சினோபெக் தொடர்பான ஒப்பந்தம் மார்ச் 2023 இல் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 22.05.2023 அன்று ஜனாதிபதி செயலகத்தில் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர ஆகியோரின் தலைமையில் கையெழுத்தானது. சினோபெக்கின் எரிபொருள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் துறையின் நிர்வாக இயக்குநரும், அப்போதைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளருமான எம்.பி.டி.யு.கே. மாபாபதிரணவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் 20 ஆண்டுகளுக்கு கையெழுத்தானது, இது நாட்டில் பெட்ரோலிய பொருட்களை சேமித்து, விநியோகிக்க மற்றும் விற்பனை செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. சினோபெக் பெயரில் நாட்டில் தற்போதுள்ள 150 எரிபொருள் நிலையங்களை நிறுவவும் ஒப்புக் கொள்ளப்பட்டது, மேலும் கூடுதலாக, 50 புதிய நிலையங்கள் நிறுவ,உரிமங்கள் வழங்கப்பட்ட 45 நாட்களுக்குள் நாட்டில் தங்கள் திட்டத்தைத் தொடங்க சினோபெக் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணையில், சினோபெக் எனர்ஜி லங்கா பிரைவேட் லிமிடெட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை ஆராய்ந்த போது, அதில் கூறப்பட்டுள்ளபடி, சினோபெக்கிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாறு இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளனது.
மார்ச் 2019 இல், சினோபெக்கிற்கு HIPG ஹம்பாந்தோட்ட சர்வதேச துறைமுகக் குழுமம் (HIPG ஹம்பாந்தோட்ட சர்வதேச துறைமுகக் குழுமம்) முதல் முறையாக எண்ணெய் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அவர்களின் எரிபொருள் தாங்கி முனையத்தை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் ஒரு கேள்வி மனுக்கோரல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, சினோபெக் எரிபொருள் எண்ணெய் லங்கா பிரைவேட் லிமிடெட் (SFOL) இலங்கை முதலீட்டு திணைக்களத்தின் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாக நிறுவப்பட்டுள்ளது. 74,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தொட்டி முனையம் அங்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மேலதிகமாக, சினோபெக் எனர்ஜி லங்கா ஜூன் 2023 இல் ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு அதே ஆண்டு ஜூலை மாதம் இலங்கை முதலீட்டு திணைகளத்தில் பதிவு செய்யப்பட்டது.
http://fuel.sinopec.com/fuel/en/lanka/
இதன் மூலம் இலங்கைக்கும் சினோபெக் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் 2023 இல் கையெழுத்தானது என்பது தெளிவாகிறது. மேலும், சினோபெக்கின் துணை நிறுவனமான சினோபெக் எனர்ஜி லங்கா பிரைவேட் லிமிடெட், 2019 ஆம் ஆண்டில் இருந்தே நாட்டில் செயல்பட்டு வருகிறது.
ஆகவே, சீனாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, நடைமுறையில் இருந்த ஒப்பந்தத்தைத் தொடர்வதற்கான கூட்டு ஆவணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையெழுத்திட்டார், அதன்படி, முன்னணி சர்வதேச பெட்ரோலிய நிறுவனமான சினோபெக், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடனேயே இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்த கூற்று தவறானது என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.