தற்போது நிலவுவது அதிக வெப்ப காலநிலையல்லவா ? அப்படியென்றால் இதனையும் தெரிந்துகொள்ளுங்கள்.

வெப்ப காலநிலை தொடர்பான பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதுடன், இதன் உண்மைத்தன்மைகளை factseeker தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றது.
by Anonymous |
மார்ச் 4, 2024

தற்போது நிலவும் அதிக வெப்ப காலநிலை படிப்படியாக அதிகரித்து வருவதுடன், இந்த வெப்பக் காலநிலையில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதற்கிடையில், வெப்பமான காலநிலை தொடர்பான பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதுடன், இதன் உண்மைத்தன்மைகளை factseeker தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றது.
நாட்டில் நிலவும் வெப்பநிலை தற்போது 50 பாகை செல்சியஸாக உயர்வடைந்துள்ளதா?
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளைப் பயன்படுத்தி, பல ஆண்டுகளாக இலங்கையின் பல்வேறு நகரங்களில் வருடாந்தம் அதிக வெப்பநிலை பதிவாகும் மாதங்கள் மற்றும் வெப்பநிலை வரம்புகள் குறித்து factseeker இனால் அவதானிக்கப்பட்ட நிலையில், நாட்டின் வெப்பநிலை அவ்வாறு 50 பாகை செல்சியஸாக உயர்வடைந்ததாக தரவுகள் வெளிப்படுத்தவில்லை.
உதாரணமாக, கடந்த சில நாட்களில் இலங்கையின் அதிகபட்ச வெப்பநிலை கொழும்பில் பதிவாகியுள்ளது. அவ்வாற்று பதிவாகியுள்ள வெப்பநிலை 36.8 பாகை செல்சியஸ் ஆகும்.மார்ச் 02, சனிக்கிழமை அன்று குருநாகலில் அதிகபட்ச வெப்பநிலை 36.8 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது. எனவே வெப்பநிலை உயர்வு பதிவாகியுள்ள போதிலும் அது 40 பாகை செல்சியஸுக்கு மேல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கும் பதிவுகள் தவறானவையாகும்.
காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளில், 50 அல்லது 100 ஆண்டுகளில் வெப்பநிலை எவ்வாறு மாற்றம் கண்டுள்ளது என்பதை அவதானித்தே முடிவுகள் எடுக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இலங்கையின் பல்வேறு நகரங்களில் கடந்த 30 வருடங்களில் (1991 – 2020) வருடத்தின் 12 மாதங்களில் பதிவான சராசரி வெப்பநிலையை வளிமண்டலவியல் திணைக்களம் கணக்கிட்டுள்ளது. அந்த பெறுமதிகளில், வருடத்தின் 12 மாதங்களில் இலங்கையில் பதிவான அதிகூடிய வெப்பநிலை மற்றும் அவை எந்தெந்த நகரங்களில் பதிவாகியுள்ளன என்பதையும் இங்கே காட்டப்பட்டுள்ளது.
இடம் மாதம் வெப்பநிலை °C
பண்டாரவளை மே 27 °C
யாழ்ப்பாணம் ஏப்ரல் 38.8 °C
மன்னார் ஏப்ரல் 33.1 °C
வவுனியா ஏப்ரல் 34.9 °C
திருகோணமலை ஜூன் 35.4 °C
அனுராதபுரம் மார்ச் 34.8 °C
புத்தளம் மார்ச் 33.5 °C
மட்டக்களப்பு ஜூன் 34.5 °C
குருநாகல் மார்ச் 35.0 °C
கொழும்பு மார்ச் 32.0 °C
நுவரெலியா ஏப்ரல் 22.5 °C
பதுளை ஆகஸ்ட் 31.2 °C
இரத்தினபுரி மார்ச் 34.2 °C
காலி மார்ச் 31.6 °C
அம்பாந்தோட்டை ஏப்ரல் 31.9 °C
மாத்தறை ஜூலை 34.1 °C
மொனராகலை ஜூலை 35.0 °C
பொலன்னறுவை ஆகஸ்ட் 35.7 °C
வடமேல், தென் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் அடுத்த சில நாட்களில் அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், அதுல கருணாநாயக்கவிடம் வினவியபோது, கடந்த சில வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் அதிக வெப்ப காலநிலை நிலவுவதாக தெரிவித்த அவர், அதற்கு பல முக்கியக் காரணங்கள் இருப்பதாகவும், கடந்த வருடங்களில் அதிகளவில் பேசப்பட்ட “எல் நினோ” நிலைமையே அதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிக வெப்பநிலையால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை சுகாதாரப் பணியகம் வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு,
1. தாகம் எடுக்கும் வரை தண்ணீர் அருந்த காத்திருக்காது அடிக்கடி தண்ணீர் (வயது வந்தவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2.5 லிட்டர்) குடிக்கவும்.
2. தாகத்திற்கு, தண்ணீருக்கு பதிலாக இனிப்பு பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும்
3. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செலவிடும் நேரத்தைக் குறைக்கவும்
4. முடிந்தவரை வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள்
5. வெளியில் பயணிக்கும் போது கூடுமானவரை குடைகள் மற்றும் தொப்பிகளைப் பயன்படுத்துங்கள்
6. வயதானவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் இந்த காலநிலையில் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது, எனவே அவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தவேண்டும்.
எனவே, இந்த அதிக வெப்ப காலத்தில் உங்கள் சொந்த நலனுக்காகவும் மற்றவர்களின் நலனுக்காகவும் மேற்கூறிய விடயங்களைக் கவனித்துக்கொள்ளுமாறு மீண்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
அதேபோல், சமூக வலைதளங்களில் தவறான தகவல்களும், சரியான தகவல்களும் பகிரப்படுவதால் தற்போதைய காலநிலை நிலைமைகள் குறித்து கவனமாக இருக்குமாறு மக்களுக்கு factseeker வலியுறுத்துகின்றது.