தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி நடாத்தப்படாதா ?

உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவின் காரணமாக பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கான பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
by Anonymous |
நவம்பர் 26, 2024

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி நடாத்தப்படாது என்றும், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவராது என்று பதிவுகள் சில whatsapp போன்ற சமூக தளங்களில் பகிரப்படுவதை FasctSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இது குறித்து factseeker ஆராய்ந்து பார்த்த போது,
கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் கசியப்பட்ட சம்பவம் தொடர்பில் பெற்றோர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அம்மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த நவம்பர் 18 ஆம் திகதி பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவதை இடைநிறுத்துமாறு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்தது. இது தொடர்பில் பிரதான ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டுள்ளன.
https://www.virakesari.lk/article/199078
https://www.adaderana.lk/news.php?nid=103581
இந்நிலையிலேயே ‘தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி நடாத்தப்படாது என்றும், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவராது’ என்று பகிரப்படும் இவ்வாறான பதிவுகள் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியி்லும் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து மேலதிகமாக ஆராய்ந்து பார்த்தது,
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தரவிடம் FactSeeker வினவிய போது, நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு காரணமாக விடைத்தாள் மதிப்பீடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடம் முதல் புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது தொடர்பான தீர்மானம் அமைச்சு மட்டத்தில் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் விஷாகா அபேரத்னவிடம் வினவிய போது, நீதிமன்ற உத்தரவு காரணமாக பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட மாட்டாது என தெரிவித்தார். கல்வித் துறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆனால் அடுத்த வருடம் முதல் புலமைப்பரிசில் பரீட்சையை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் குறிப்பிட்ட தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆகவே, சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றதை போன்று தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி இடம்பெறாது என்பதற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் எதுவும் அரசங்கத்தினால் எடுக்கப்படவில்லை என்பதையும் உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவின் காரணமாக பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கான பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதையும் FactSeeker உறுதிப்படுத்திக்கிறது.