தமது அரசாங்கத்தின் கீழ் எந்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது என அநுர கூறினாரா?

அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பமுடைய கடிதம் ஒன்று Newsfirst செய்தி அலைவரிசையில் வெளியிட்டது போன்ற பதிவே இவ்வாறு பகிரப்பட்டுள்ளது.
by Anonymous |
ஆகஸ்ட் 27, 2024

“எந்த மதத்திற்கும் முன்னுரிமை இல்லை. மதம் அரசிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுக்கு அநுரவிடமிருந்து ஒரு கடிதம்” என்ற புகைப்படத்துடனான செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
தேசிய மக்கள் சக்தியின் கடித தலைப்பு மற்றும் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பமுடைய கடிதம் ஒன்று Newsfirst செய்தி அலைவரிசையில் வெளியிட்டது போன்ற பதிவே இவ்வாறு பகிரப்பட்டு வந்தது.
அக்கடிதத்தில், “சங்க மாநாடு நடத்தியதற்காக நாங்கள் இனவாதிகளோ, மதவாதிகளோ அல்ல. ஒரு கருணையுள்ள அரசாங்கத்தில் எந்த மதத்திற்கும் முன்னுரிமை இல்லை. எங்கள் கொள்கைகளில் எந்த வித்தியாசமும் இல்லை. நாம் பின்தங்கிய நாடாக மாறியதற்கு மதமே முக்கிய காரணம் என கருதுகிறோம். நாட்டையும் மதத்தையும் பிரித்து வைத்திருப்பதே எங்களின் முக்கியக் கொள்கையாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான செய்தி Newsfirst இணையத்தளத்திலோ அல்லது சமூக வலைதள பக்கங்களிலோ வெளியிடப்பட்டுள்ளதா என factseeker ஆராய்ந்து பார்த்ததில் இவ்வாறான செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறான கடிதமொன்றை ஊடக பிரதானிகளுக்கு அனுப்பியுள்ளாரா என்பது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவினரிடம் factseeker வினவியபோது, அவ்வாறானதொரு கடிதம் அநுரகுமார திஸாநாயக்கவினால் அனுப்பப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.மேலும் இது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உருவாக்கப்பட்டு பரிமாறப்பட்ட கடிதம் என தெரிவித்தனர்.
இதேவேளை, தேசிய பிக்குகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு கடந்த 24ஆம் திகதி மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் இடம்பெற்றது. இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கருத்து தெரிவித்த போது, “அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற சரத்து தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என தெரிவித்தார்.
ஆகவே, தனது அரசாங்கத்தின் கீழ் எந்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தாதாக பரப்பப்படும் செய்தி போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.