ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளரை ஒர்கா (Orca) திமிங்கலம் கொன்றதாக பகிரப்படும் AI காணொளி

ஜெசிக்கா ராட்கிளிப் என்ற பெயரில் ஒரு பயிற்சியாளரே இல்லையென சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
by Anonymous |
ஆகஸ்ட் 14, 2025

திமிங்கலங்களுடனான நீர் விளையாட்டு நிகழ்வொன்றில் ஜெசிக்கா ராட்கிளிப் (Jessica Radcliffe) என்ற 23 வயது கடல் பயிற்சியாளர் ஒர்கா திமிங்கல தாக்குதலில் உயிரிழந்ததாகக்கூறும் காணொளிகளும், புகைப்படங்களும் சமீப காலமாக சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
அவ்வாறு பகிரப்படும் காணொளியில், ஒரு நிகழ்ச்சியின் போது பார்வையாளர்கள் முன்னிலையில், ஒர்கா திமிங்கலம் தனது பயிற்சியாளரான ஜெசிக்கா ராட்கிளிப்-ஐ விழுங்குவதை போன்று இருப்பதுடன், ஜெசிக்கா ராட்கிளிப்பின் மறைவு குறித்து வருந்துவதாகவும் பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.
வீடியோ கீழே உள்ளது:
https://www.facebook.com/share/r/19LTuh1bGd/
https://vt.tiktok.com/ZSS7m2MLR/
அதிகளவில் பகிரப்படும் இந்த காணொளியின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்ததில் உண்மைக்கு மாறான பல விடயங்களை குறித்த விடியோவில் அவதானிக்க முடிந்தது.
எனவே Factseeker இது குறித்து ஆய்வு செய்ததில்,
X தளத்தில் ஜெசிக்கா ராட்கிளிப் குறித்து பகிரப்படும் காணொளியை Grok AI ஊடாக உண்மைச் சரிபார்ப்பு செய்தபோது இந்த காணொளி AI மூலமாக உருவாக்கப்பட்ட ஒன்றென்பதை உறுதிப்படுத்த முடிந்தது .
மேலும், இவ்வாறு பகிரப்படும் வீடியோக்களில் உள்ள சில காட்சிகள் உண்மையான நிகழ்வுகளின் தொகுப்பாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. உண்மை சம்பவத்தின் படங்கள் மற்றும் வீடியோக்களை உள்ளடக்கிய வகையில் இந்த காணொளி உருவாக்கப்பட்டு, ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளர் ஒர்கா திமிங்கல தாக்குதலில் உயிரிழந்ததாக அவற்றை உண்மை என்று காட்டும் வகையில் முழுமையான காணொளியும் உருவாக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.
அதன்படி, 2010 ஆம் ஆண்டு புளோரிடாவில் நடந்த ஒரு ஓர்கா திமிங்கலம் அதன் பயிற்சியாளர் “ட்ரோன் பிராஞ்சியோ” (Dawn Brancheau) வைக் கொன்ற சம்பவத்தின் காட்சிகள் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இதேபோல், ஒரு வருடத்திற்கு முன்பு டெனெரிஃப்பில் ஒரு பயிற்சி அமர்வின் போது ஸ்பானிய பயிற்சியாளர் அலெக்சிஸ் மார்டினெஸை கீட்டோ என்ற ஓர்கா திமிங்கலம் தாக்கிய வீடியோ காட்சிகளையும் சில வீடியோக்கள் பயன்படுத்தியிருந்தன.
மேலும் தற்போது பகிரப்படும் காணொளி குறித்து சர்வதேச ஊடகங்கள் ஏதேனும் தகவல்களை பதிவு செய்துள்ளனரா என ஆராய்ந்ததில், இவ்வாறான நிகழ்வு உண்மையான ஒன்றல்ல என்பதை பல ஊடகங்கள் பதிவு செய்துள்ளமையையும் , கடல் பூங்காக்கள் அல்லது மீன்வளங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அல்லது அதிகாரப்பூர்வ வெளியீடுகளில் அவரைப் பற்றிய எந்த குறிப்பும் இல்லை எனவும், ஜெசிக்கா ராட்கிளிப் என்ற பெயரில் ஒரு பயிற்சியாளரே இல்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன என்பதையும் அவதானிக்க முடிந்தது.
ஆகவே, ஜெசிக்கா ராட்கிளிப்பின் விபத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.