ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவதாக திலித் ஜயவீர கூறியதாக போலிக்கடிதம்
தம்மிக்க பெரேரா தான் விலகிக்கொள்வதாக விடுத்த கடிதத்தை திருத்தியமைத்து இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.
by Anonymous |
ஆகஸ்ட் 10, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும், ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனு தாக்கலிலிருந்து விலகப் போவதாகவும் திலித் ஜயவீர அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் கடிதம் ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.
சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக தாம் போட்டியிடவுள்ளதாக, பிரபல தொழில் அதிபரும் தாயக மக்கள் கட்சியின் தலைவருமான திலித் ஜயவீர தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திலித் ஜயவீர இம்முறை ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனுவில் இருந்து தாம் விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், அதனை சர்வசன அதிகார கூட்டணிக்கு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடும் கடிதமொன்று இப்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க factseeker, தாயக மக்கள் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஹேமகுமார நாணயக்காரவிடம் வினவியபோது, அவ்வாறான எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், இவ்வாறு பகிரப்படும் கடிதம் போலியானது என்பதையும் தெரிவித்தார்.
அதேபோல், நேற்றைய தினம் (09.08.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த திலித் ஜயவீர, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடவுள்ளதாகவும், நல்ல நேரம் பார்த்து தாம் தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
Link:https://www.facebook.com/NewsfirstSL/videos/904734911698876/
இந்தக் கடிதம் குறித்து மேலும் ஆராய்ந்து பார்த்ததில், இது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்த தம்மிக்க பெரேரா தான் விலகிக்கொள்வதாக விடுத்த கடிதத்தை திருத்தியமைத்து இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
ஆகவே, ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனு தாக்கலில் இருந்து தாம் விலகிக்கொள்ளப்போவதாக திலித் ஜயவீர சர்வசன அதிகார கூட்டணிக்கு தெரிவித்துள்ளதாக பகிரப்படும் கடிதமானது போலியாக தயாரிக்கப்பட்ட ஒன்று என்பதை Factseeker உறுதிப்படுத்துகின்றது.