ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார பெற்றுக்கொண்ட வாக்கு சதவீதம் எத்தனை?

இரண்டாவது விருப்பு வாக்குகளின் முடிவில் எந்த சதவீத மதிப்பும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படவில்லை
by Anonymous |
செப்டம்பர் 23, 2024

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதம் குறித்து செப்டெம்பர் 23 (இன்று) மௌபிம பத்திரிகையின் முதற்பக்கத்தில் செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டிருப்பதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
அச்செய்தியில் அநுரகுமார திஸாநாயக்க பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை (5,740,179 ) 55.89% என்றும், சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகளின் சதவீதம் 44.11% என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் சிலவற்றிலும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை அநுரகுமார திசாநாயக பெற்றுக்கொண்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவிலும் இச் சதவீதங்கள் குறிப்பிட்டிருந்ததால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.
மௌபிம பத்திரிகையில் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் “முதல் சுற்றில் 5,634,915 வாக்குகளைப் பெற்று 42.31 வாக்கு சதவீதத்தைப் பெற்ற அநுரகுமார திஸாநாயக்க, இரண்டாவது சுற்றில் மேலும் 105,264 வாக்குகளைப் பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை 5,740,179 (55%) ஆக உயர்த்தி இந்த வெற்றியை பெற்றார்.” என்றும் “முதல் சுற்றில் சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளைப் பெற்று 32.76% வீதத்தைப் பெற்றிருந்தார்.இரண்டாம் சுற்றுக்குப் பின்னர் சஜித் பிரேமதாச 4,530,902 வாக்குகளை பெற்றதோடு அவர் பெற்ற வாக்குகளின் சதவீத மதிப்பு 44.11 %.” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய தேர்தல் முடிவு அட்டவணையை ஆராய்ந்ததில், இரண்டாவது விருப்பு வாக்கு முடிவில் எந்த சதவீத மதிப்பும் வழங்கப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தேர்தல் முடிவு அட்டவணையில், இரண்டாம் வாக்கு எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அநுரகுமார திசாநாயக பெற்றுக்கொண்ட வாக்குகள் 105,264 எனவும், சஜித் பிரேமதாச 167,867 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையுடன் அவர்கள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை சதவீதத்தில் அவதானிக்கும் போது அநுரகுமார திஸாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் சதவீதம் 43.1% ஆகவும், சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்ட வாக்குகளின் சதவீதன் 34%. ஆகவும் அதிகரிக்கின்றன.
மேலும், இரண்டாவது விருப்பு வாக்கு குறித்து, manthri.lk இணையதளம் வெளியிட்ட தகவலில் சஜித் பிரேமதாசவிற்கு 1.26% வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அநுரகுமார திஸாநாயக்கவிற்கு 0.79% வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://manthri.lk/en/presidential-election-result-2024
ஆகவே, மௌபிம பத்திரிகையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் சதவீதம் குறித்து வெளியிட்ட செய்தி தவறானது என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.
மேலும், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.