ஜக்கி சான் இறந்துவிட்டார் என பகிரப்படும் போலிச்செய்தி

இம்மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள 78வது லோகார்னோ திரைப்பட விழாவில் ஜாக்கி சான் மதிப்புமிக்க பர்டோ அல்லா கேரியெரா (தொழில் சாதனை) விருதைப் பெற உள்ளார்
by Anonymous |
ஆகஸ்ட் 5, 2025

உலகப் புகழ்பெற்ற சினிமா நட்சத்திரம் ஜக்கி சான் இறந்துவிட்டார் என சமூக வலைதளங்களில் பகிரப்படும் சில பதிவுகளை factseeker இனால் அவதானிக்க முடிந்தது. அந்தப் பதிவுகளில், “சோகமான செய்தி: 15 நிமிடங்களுக்கு முன்பு பெய்ஜிங்கில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் 30 பேர் இறந்தனர். அவர்களில் ஒருவர் 2016 ஆம் ஆண்டு பிரபலமான ஆஸ்கார் விருது பெற்ற ஜாக்கி சான் என்பது இன்னும் மனவேதனை அளிக்கிறது” என்று அப்பதிவு பகிரப்படுகின்றது.
இந்தப் பதிவுகளை அவதானித்ததில், கடந்த ஜூலை 23 முதல் ஜூலை 29 வரை, பெய்ஜிங் மிகக் கடுமையான கனமழையால் பாதிக்கப்பட்டிருந்தது, இதில் குறைந்தது 30 பேர் இறந்திருக்க முடியும் என்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்த அனர்த்தத்தில் ஜக்கி சான் இறந்ததாக எந்த நம்பகமான சர்வதேச செய்தி மூலமும் குறிப்பிடப்படவில்லை என்பதை அவதானிக்க முடிந்தது.
மேலும் ஆராய்ந்து பார்த்ததில் ஜக்கி சான் தற்போதும் திரைப்படங்களில் நடித்து வருவதுடன், இம்மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள 78வது லோகார்னோ திரைப்பட விழாவில் ஜக்கி சான் மதிப்புமிக்க பர்டோ அல்லா கேரியெரா (தொழில் சாதனை) விருதைப் பெற உள்ளார் என்பதையும் அவதானிக்க முடிந்தது. அவர் தனது படங்களான பொலீஸ் ஸ்டோரி மற்றும் ப்ராஜெக்ட் ஏ ஆகியவற்றை அறிமுகப்படுத்தி அது குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பகிரப்படும் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் AI மூலமாக உருவாக்கப்பட்டதா என ஆராய்ந்து பார்த்ததில், அது முழுமையாக AI மூலம் உருவாக்கப்பட்டது என கண்டறிய முடிந்தது.
ஆகவே உலகப் புகழ்பெற்ற சினிமா நட்சத்திரம் ஜக்கி சான் இறந்துவிட்டார் என சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பதையும், இந்த செய்தி பொய்யானது என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.