சுற்றுலாத்துறையின் பங்களிப்புடன் நெருக்கடியில் இருந்து மீண்டெழும் இலங்கை

2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டியிருந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 1.03 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
by Anonymous |
ஏப்ரல் 10, 2024

சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் கடந்த 2022ஆம் ஆண்டில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டது. இலங்கையின் நீண்டகால கட்டமைப்பு பலவீனங்கள் மற்றும் கொள்கை தவறுகளால் இவ்வாறானதொரு நிலைமைக்கு இலங்கை முகங்கொடுக்க நேர்ந்தது.
மேலும், மோசமான நிர்வாகம், பலவீனமான முதலீட்டு சூழல் மற்றும் நிதி ஒழுக்கமின்மை ஆகியவை பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு பங்களித்தன. 2020 ஆம் ஆண்டில் சர்வதேச நிதிச் சந்தைகளுக்கான அணுகலை இழந்த பின்னர், 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பு ஒரு வாரத்திற்கும் குறைவான இறக்குமதியை பெற்றுக்கொள்ள போதுமானதாகவே காணப்பட்டது. மேலும் அந்நிய செலாவணி பணப்புழக்கக் கட்டுப்பாடு அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.
இலங்கையின் மொத்த வருவாயில் பங்களிப்பு செலுத்தும் பிரதான துறைகளில், இலங்கையின் சுற்றுலாத்துறை மிக முக்கிய ஒன்றாகும். எனினும் கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் சுற்றுலாத்துறையும் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இலங்கை சுற்றுலாத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அதன் பின்னர் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, இலங்கையின் சுற்றுலாத்துறை மோசமான வீழ்ச்சியை சந்தித்தது.
அடுத்த ஆண்டுகளில் இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டெழும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், நாட்டின் அரசியல் நெருக்கடி நிலைமைகள், மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக சுற்றுலாத்துறையிலும் தாக்கத்தை செலுத்தியது.
கடந்த சில மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பான தரவுகளின் பகுப்பாய்வு ஒன்றை factseeker மேற்கொண்டது.
கடந்த ஒன்பது ஆண்டுகளின் இலங்கையின் சுற்றுலாத்துறை தரவுகளை அவதானிக்கும் போது, 2018 இலேயே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர். அந்த ஆண்டில் மொத்தமாக 2,333,796 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். இதனால் நாட்டுக்கு (U$$ 4,380.6 million) 712,027.3 மில்லியன் ரூபா அந்நியச் செலாவணி வருவாய் கிட்டியுள்ளது.
எனினும் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற 2019ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவையே வெளிப்படுத்தியிருந்தது. அந்த ஆண்டில் மொத்தமாக 1,913,702 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
2020 ஆம் ஆண்டில் , முதல் மூன்று மாதங்களில் 507,311 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்த போதிலும், கோவிட் -19 தொற்றுநோய் பரவியபோது சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அந்த ஆண்டு நாடு மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் டிசம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 393 ஆகக் காணப்பட்டது. இந்த ஆண்டில் வெறுமனே 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை மட்டுமே பெற்றுக்கொள்ளவும் முடிந்தது.
2022 ஆம் ஆண்டில், இலங்கை எதிர்கொண்ட மோசமான அந்நியச்செலாவணி பற்றாக்குறை காரணமாக நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை சீர்குலைந்ததை அடுத்து நாட்டில் ஏற்பட்ட போராட்டமும் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு இடையூறாக அமைந்திருந்தது. இந்த ஆண்டில் 719,978 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்ததுடன், இதனால் 362.426.1 மில்லியன் ரூபா வருவாயையும் ஈட்டக்கூடியதாக இருந்தது
எனினும் 2023ஆம் ஆண்டில் மீண்டும் நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சி கண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. கடந்த ஆண்டில் மொத்தமாக 1,487,303 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி, பிப்ரவரி, மார்ச்) 6,35,784 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். அத்துடன் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதியில் இருந்து 7 ஆம் திகதிவரை 39,798 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டியிருந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 1.03 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
: factseeker