சிறுவர்கள் உண்ணும் இனிப்பு உண் பண்டங்கள் வடிவிலான போதைப்பொருள் என பகிரப்படும் போலிச்செய்தி

இப் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் பழைய புகைப்படம் என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
by Anonymous |
பிப்ரவரி 7, 2025

சிறுவர்கள் உண்ணும் இனிப்பு உண் பண்டங்கள் வடிவிலான போதைப்பொருள் ஒன்று பாடசாலையில் மாணவர்கள் மத்தியில் பாவனையில் இருப்பதாகவும், அவ்வாறான ஒன்று தற்போது கண்டெடுக்கப்பட்டதாகவும் புகைப்படத்துடனான பதிவொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இப் பதிவானது அதிகம் பகிரப்பட்டு வருவதால் FactSeeker இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தது.
அவ்வாறு சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவில் பயன்படுத்தபட்டுள்ள புகைப்படத்தை Google Reverse Image மூலம் ஆராய்ந்ததில், இதே புகைப்படத்துடனான செய்திகள் சர்வதேச செய்தித்தளங்களில் பிரசுரமாகியிருப்பதை அவதானிக்க முடிந்தது.
அந்தக் கட்டுரைகளை ஆராய்ந்து பார்த்ததில், இப் புகைப்படம் குறித்து தவறான செய்திகள் பல்வேறு நாடுகளில் பகிரப்பட்டு இருப்பதையும், பல சர்வதேச தரவு சரிபார்ப்பு அமைப்புகள் இது குறித்த உண்மையான செய்திகளை வெளியிட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
இப் புகைப்படம் குறித்து மேலும் ஆராய்ந்த போது, பிரித்தானியாவை தளமாகக்கொண்டு இயங்கும் ‘The Sun’ செய்தி தளத்தினால் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த செய்தி ஒன்றை அவதானிக்க முடிந்தது. அச் செய்தியில் இங்கிலாந்தின் Wythenshawe நகரில் ‘டெடி பியர் எக்ஸ்டசி மாத்திரைகளை(teddy bear ecstasy pills) உட்கொண்ட 13 வயது பாடசாலை மாணவிகள் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.அந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள புகைப்படமும் தற்போது இலங்கையில் பகிரப்படும் புகைப்படமும் ஒரே புகைப்படம் என்பதையும் அவதானிக்க முடிந்தது. இதன் மூலம் இப் புகைப்படம் இங்கிலாந்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றுடன் தொடர்பான புகைப்படம் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
ஆகவே, “பாடசாலையில் கண்டெடுக்கப்பட்ட போதை வஸ்து சிறுவர்கள் உண்ணும் மிட்டாய் வடிவில் Strawberry bubblegum …
உங்கள் குழந்தைகள் பத்திரம் போதை வியாபாரிகளின் இலக்கு பெரியவர்கள் அல்ல சிறுவர்களே அவதானமாய் இருப்போம்
..மட்டக்களப்பு.. ” என சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த பதிவானது தவறானது என்பதையும் இப் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் இங்கிலாந்து சம்பவத்தில் தொடர்பான புகைப்படம் என்பதையும் FactSekker உறுதிப்படுத்துகிறது.