சிகிரியாவை இரவில் பார்வையிடலாம் என பகிரப்படுகின்ற செய்தி போலியானவை
"இரவு நேரத்தில் சிகிரியா குன்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை" என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
by Anonymous |
ஜனவரி 16, 2025
இலங்கையின் மிக முக்கிய சுற்றுலா தளமான சிகிரியாவை இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம் என பதிவுகள் சில சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இவை சுற்றுலா பயணிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதால் FactSeeker இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்தது.
இது குறித்து சிகிரியா ரஜமஹா விகாரையிடம் FactSeeker வினவிய போது, சிகிரியா குன்று இரவு நேரத்தில் தோற்றமளிப்பது போன்று பகிரப்படுகின்ற புகைப்படம் போலியானது என்றும் வழமை போன்று தினமும் அதிகாலை 4.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிகிரியாவிற்கு விஜயம் செய்ய முடியும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பொன்றை அவதானிக்க முடிந்தது. அவ்வறிவிப்பில், “இரவு நேரத்தில் சிகிரியா குன்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை” என்றும் “இரவு நேரத்தில் சிகிரியா குன்று மின்விளக்குகளுடன் காட்சியளிப்பது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற புகைப்படம் போலியானது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, சிகிரியாவை இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம் என சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற பதிவுகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.