சர்வதேச புத்தகக் கண்காட்சியில் அநுரகுமாரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதா?
புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் அவ்வாறானதொரு எதிர்ப்புகள் எதுவும் தெரிவிக்கவி்ல்லை என அச்சங்கம் கூறுகின்றது
by Anonymous |
அக்டோபர் 1, 2024
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் கடந்த சனிக்கிழமை (28) இடம்பெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வருகை தருவது தொடர்பில் கேள்விக்குறியான சூழல் நிலவுவதாக பதிவுகள் சில சமூக வலைதளங்ககளில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
“ஜனாதிபதியின் வருகைக்கு புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் மற்றும் வாசகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக” அப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புத்தகக் கண்காட்சியில் பங்குபற்றியது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமையினால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.
இது தொடர்பில் இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் தினேஷ் குலதுங்கவிடம் factseeker வினவிய போது, புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் அவ்வாறானதொரு எதிர்ப்புகள் எதுவும் தெரிவிக்கவி்ல்லை என குறிப்பிட்டார்.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, புத்தகக் கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்ற “குழந்தைகள் புத்தகங்கள் தொடர்பான தேசிய கொள்கை முன்மொழிவு வரைபுகள்” தொடர்பான கலந்துரையாடலிலும் பங்குபற்றினார் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினரிடம் Factseeker வினவியபோது, சமூக ஊடகங்களில் குறிப்பிட்டது போன்ற எதிர்ப்புகள் எதுவும் வரவில்லை எனவும் ஜனாதிபதி, புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டு அரங்குகளுக்குச் சென்று பார்வையிட்டதாகவும் அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்விலும் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.
ஆகவே, “ஜனாதிபதியின் வருகைக்கு புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் மற்றும் வாசகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக” சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பதிவுகள் போலியானவை என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.