சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டதாக?
பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை ஆராய்ந்ததில், உறுப்பினர்களின் பட்டியலில் அவரது பெயர் "கௌரவ அசோகா சபுமல் ரன்வல" என்றே பதிவாகி இருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
by Anonymous |
டிசம்பர் 11, 2024
இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளதாக பதிவுகள் சில சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இது குறித்து சமூகவலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்துள்ளதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
சமூக வலைதளங்களில் குறிப்பிட்டது போல பெயர் மாற்றம் ஏற்றப்பட்டுள்ளதா என பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை ஆராய்ந்ததில், உறுப்பினர்களின் பட்டியலில் அவரது பெயர் “கௌரவ அசோகா சபுமல் ரன்வல” என்றே பதிவாகி இருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
https://www.parliament.lk/si/members-of-parliament/directory-of-members/viewMember/3476
மேலும், பாராளுமன்ற இணையத்தளத்தில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிற பகுதிகளை ஆராய்ந்ததில், சபாநாயகர் பதவிக்கு அவர் தெரிவு செய்யப்பட்ட போது வெளியாகிய செய்தியில ‘கலாநிதி அசோக ரன்வல’ என்று குறிப்பிட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.
அசோக ரன்வலவின் பெயரை Google மூலம் ஆராய்ந்ததில், பாராளுமன்ற இணையதளத்தில் ‘கலாநிதி அசோக ரன்வல’ என குறிப்பிடப்பட்டுள்ள பல செய்திகளை அவதானிக்க முடிந்தது.
மேலும், இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகரை சந்தித்த நிகழ்வை உள்ளடக்கிய பாராளுமன்றத்தின் செய்திக்குறிப்பிலும் அவரது பெயர் ‘கலாநிதி அசோக ரன்வல’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் பெயர் இடம்பெறுள்ள இடங்களில் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் உண்மையானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.