சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

சந்திரிகாவின் இளம்வயது புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட காணொளியே சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.
by Anonymous |
ஜூன் 9, 2025

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது இளம் வயதில் நடனம் ஆடியதாக தெரிவிக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

இக் காணொளி குறித்து பலரும் தமது கருத்துக்களை பதிவிட்டு குறித்த காணொளியை பகிர்ந்து வருவதால் factseeker இது குறித்து அவதானம் செலுத்தியது.

Google Lens மூலம் ஆராய்ந்ததில், இந்தக் காணொளி தொடர்பான நம்பத்தகுந்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.மேலும், காணொளியில் சில தெளிவற்ற அம்சங்களும் காணப்பட்டன.
இது குறித்து மேலும் ஆராய்ந்த போது, இக் காணொளியை ஒத்த புகைப்படமொன்றை சந்திரிகா தமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. “1969 ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற இலங்கை மாணவர் சங்கத்தின் கலாச்சார நிகழ்வில் மயூர வண்ணமுடன் அவர் நடனம் ஆடிய போது எடுத்த புகைப்படம் என அப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் காணொளியை முதன் முதலில் வெளியிட்ட சமூக வலைத்தளப் பக்கம், இது செயற்கை AI மூலமாக உருவாக்கப்பட்டதாக (AI INFO) குறிப்பிட்டிருந்தது.

ஆகவே, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது இளம் வயதில் நடனம் ஆடுவதாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற காணொளி அவரது இளம் வயது புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.
 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            