சந்திரயான்-3 விண்கலத்தினால் எடுக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளிகள் போலியானவை

இவ்வாறு பரவும் காணொளிகள் சந்திரயான்-3 விண்கலத்தினால் அனுப்பப்பட்டவை அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
by Anonymous |
ஆகஸ்ட் 23, 2023

இந்திய இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டுள்ள நிலையில் குறித்த விண்கலத்தினால் நிலவின் மேற்பரப்பு படம் பிடிக்கப்பட்டுள்ளதாக சில காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை factseekerஇனால் அவதானிக்க முடிந்துள்ளது. இவ்வாறு பகிரப்படும் காணொளிகள் சுமார் 20 வினாடிகள் பதிவாகியுள்ளன.
இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இவ்வாறு பரவும் காணொளிகள் சந்திரயான்-3 விண்கலத்தினால் அனுப்பப்பட்டவை அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. குறிப்பாக இந்தக் காணொளிகளை ‘கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச்’ மூலம் ஆராய்ந்து பார்த்ததில் இவை i-Stock மற்றும் Flash movie இணையதளங்களில் பதிவேற்றப்பட்டவை என்பதை கண்டறிய முடிந்தது.
“Textured surface of the moon in motion close-up. Satellite moving along the moon. 3d illustration. Elements of this image furnished by NASA.”( நிலவின் மேற்பரப்பின் கடினமான பரப்பை, நெருங்கிச்சென்று எடுக்கப்பட்ட 3D புகைப்பட விளக்கம். இந்த புகைப்படம் நாசாவால் வழங்கப்பட்டுள்ளது) என தலைப்பிடப்பட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 03ஆம் திகதி இந்த புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இவ்வாறு பரவிவரும் காணொளி குறித்து இஸ்ரோவின் உத்தியோகபூர்வ பக்கங்களில் ஆராய்ந்தபோதும், அவர்களினால் கடந்த 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று நிலவின் புகைப்படங்களை தொகுத்து இஸ்ரோவினால் வெளியிட்டிருந்த காணொளியொன்றை மட்டுமே இறுதியாக பதிவேற்றியுள்ளனர்.
ஆகவே தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளி இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் மூலமாக பதிவு செய்யப்பட்ட காணொளிகளோ அல்லது புகைப்படங்களோ அல்ல என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.