சஜித்துக்கு வாக்களித்தால் சிங்களவர்களை தோற்கடிக்க முடியும் என சுமத்திரன் எம்.பி கூறியதாக போலிச்செய்தி
MAWBIMA மற்றும் CEYLON TODAY ஆகிய பத்திரிகைகளில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன.
by Anonymous |
செப்டம்பர் 9, 2024
“சஜித்துக்கு வாக்களித்தால் மட்டுமே சிங்களவர்களை தோற்கடிக்க முடியும்” (Sinhalese can be defeated only by voting for Sajith” – sumanthiran ) என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளதாக செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்குவதாக கடந்த திங்கட்கிழமை (செப் 2) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இது குறித்த செய்திகள் தமிழ், சிங்கள, ஆங்கில தேசிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இம்முறை 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் “சஜித்துக்கு வாக்களித்தால் மட்டுமே சிங்களவர்களை தோற்கடிக்க முடியும்” என்ற கருத்தொன்றை சுமந்திரன் எம்.பி கூறியதாக செய்திகளும் பகிரப்படுவதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.
இலங்கை தமிழரசுக்கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எம்.எ.சுமந்திரன் அறிவித்த (செப் 2) பின்னர் MAWBIMA மற்றும் CEYLON TODAY பத்திரிகைகளில் இவ்வாறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதா என ஆராய்ந்ததில் அவ்வாறான செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் factseeker வினவிய போது, இது 2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் MAWBIMA மற்றும் CEYLON TODAY பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட செய்தியே இவ்வாறு தற்போது பகிரப்படுவதாகவும் எனினும் அப்போதும் அவ்வாறான ஒரு கூற்றை தாம் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி தமிழில் வெளியிட்ட அறிக்கையை தவறாக திரிபுபடுத்தி அப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதாகவும் அதற்கு எதிராக முறைப்பாடு செய்ததாகவும் அந்த முறைப்பாடு இன்னமும் விசாரணை மட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி MAWBIMA மற்றும் CEYLON TODAY ஆகிய பத்திரிகைகளில் இது தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்ததை factseeker இனால் அவதானிக்க முடிந்தது. மேலும், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சுமந்திரன் தரப்பினரால் அனுப்பப்பட்ட கடிதத்தையும் இங்கே இணைத்துள்ளோம்,
ஆகவே,”சஜித்துக்கு வாக்களித்தால் மட்டுமே சிங்களவர்களை தோற்கடிக்க முடியும்” என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் என தற்போது பகிரப்படும் செய்தியானது கடந்த 2019 ஆம் ஆண்டு MAWBIMA மற்றும் CEYLON TODAY ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி என்பதுடன், அப்போது வெளிவந்த செய்தியும் போலியான செய்தி என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.