கொரிய மொழிப் பரீட்சை தொடர்பாக போலியாக பகிரப்படும் விண்ணப்பப்படிவம்
by Anonymous |
பிப்ரவரி 21, 2024
2024ஆம் ஆண்டுக்கான கொரிய மொழிப் பரீட்சை தொடர்பான விண்ணப்பம் கோரல் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விண்ணப்பம் என குறிப்பிட்டு விண்ணப்பப்படிவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
“கொரிய EPS பரீட்சை ( Korean EPS Topic) – 2024 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான முன்-கணிப்பு – பரீட்சையில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த முன்கணிப்புக்கான தகவலை வழங்க வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ சின்னமும் இணைக்கப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பப்படிவத்தை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதுடன், இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து அறிவிக்குமாறு factseekerக்கும் கோரிக்கை விடப்பட்டதை அடுத்து factseeker இந்த விண்ணப்பம் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் வினவியது.
எனினும் இந்த விண்ணப்பப்படிவம் கொரிய மொழிப் பரீட்சைக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத போலி விண்ணப்பப்படிவம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியகம் தெரிவித்ததுடன், சமூக வலைதளங்களில் இவ்வாறு பகிரப்படும் போலியான விண்ணப்பப்படிவம் குறித்து பொதுமக்களை அறிவுருத்துமாரும் கேட்டுக்கொண்டனர்.
மேலும், இந்த பரீட்சை விண்ணப்பம் முற்றிலும் போலியானது என்பதை கொரிய HRDK நிறுவனம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாகவும், மேலும் போலியான படிவத்தில் பொதுமக்களின் தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறும் பணியகம் கோரியுள்ளது.
2024 கொரிய மொழிப் பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் https://www.slbfe.lk/slbfe-announcement/registration-for-Korean-language-test-2024-instructions-for-applicants/ என வெளியிடப்பட்டுள்ள கொரிய EPS பரீட்சை வழிமுறைகளைப் பார்வையிடலாம். அத்துடன் விண்ணப்பம் தொடர்பான அறிவுறுத்தல்கள் மட்டுமே அங்கு வெளியிடப்பட்டுள்ளன. மேலும் உத்தியோகபூர்வ விண்ணப்பப் படிவம் பெப்ரவரி 26 முதல் 29 வரை http://www.slbfe.lk இல் மட்டுமே வெளியிடப்படும். அதேபோல், 1989 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பிரிவின் தலைவர் மதுஷன் குலரத்ன தெரிவித்தார். மேலும், இதுவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எந்தவொரு விண்ணப்பப்படிவத்தையும் வழங்கவில்லை எனவும் மதுஷன் குலரத்ன உறுதிப்படுத்தினார்.
ஆகவே சமூக வலைதளங்களில் தற்போது பகிரப்பட்டு வரும் 2024ஆம் ஆண்டுக்கான கொரிய மொழிப் பரீட்சை தொடர்பான விண்ணப்பப்படிவம் போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.