கம்சாட்கா தீவிற்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து பகிரப்படும் தவறான காணொளிகள்

ரஷ்யாவின் கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பின்னர் சுனாமி அலைகள் ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளைத் தாக்கியுள்ளன.
by Anonymous |
ஜூலை 30, 2025

ரஷ்யாவின் கம்சாட்கா தீவிற்கு அருகே இன்று அதிகாலை (ஜூலை 30, 2025 ), 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பசிபிக் பிராந்தியம் முழுவதும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என்றாலும், இது கடந்த பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிக வலுவான நிலநடுக்கமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பான், ரஷ்யா, ஹவாய், அலாஸ்கா, கலிபோர்னியா, கனடா, பசிபிக் தீவுகள் மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரஷ்யாவில் 4 மீட்டர் உயரமுள்ள கடல் அலைகள் பதிவாயுள்ளதுடன் , பிற பகுதிகளில் அவை பெரும்பாலும் 1.2 மீட்டருக்கும் குறைவாக அலைகளாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பலர் இது குறித்து செய்திகளையும், பதிவுகளையும் பதிவிட்டு வருகின்ற நிலையில், அவற்றில் பல தவறான காணொளிகள் மற்றும் பதிவுகளையும் factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
அவற்றில் சிலவற்றை factseeker தரவு சரிபார்த்து இங்கே பதிவிடுகின்றது.
1. கம்சட்காவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் 8.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அவுஸ்திரேலியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காணொளியொன்று X தளத்தில் பகிரப்பட்டுள்ளது. எனினும் இந்தக் காணொளியானது இந்த ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பதிவாகியிருந்த காணொளியாகும்.
Link – https://www.instagram.com/reel/DH3p88_CNJM/
2. நேற்று முன்தினம், ரஷ்யாவின் கம்சட்காவில் ஐந்து பெலுகா திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதாகவும், அந்த பகுதியிலேயே இன்றைய தினம் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இயற்கை எப்போதும் முதலில் தெரிந்துகொள்ளும் என்ற பதிவொன்று பகிரப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு பகிரப்படும் காணொளியானது கடந்த 2023ஆம் ஆண்டு கடற்கரையில் சிக்கிய பெலுகா திமிங்கலங்களை ரஷ்ய மீனவர்கள் மீட்ட காணொளியாகும்.
link – https://www.newsweek.com/beluga-whales-stranded-beach-rescued-fishermen-1819950
3. ரஷ்யாவை 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாகவும், இதனால் சுனாமி ஏற்படுவதற்கான காரணியாக அமைந்ததாகவும் காணொளியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றது. எனினும் இந்தக் காணொளியானது, கடந்த 2017 ஆம் ஆண்டு கிரீன்லாந்தில் ஏற்பட்ட சுனாமி பேரலையின் போது பதிவாகிய காணொளியாகும்.
link – https://www.youtube.com/watch?v=IFzXB2dKgcU
4. 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ரஷ்யாவின் கடற்கரையில் ஏற்பட்டதுடன் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்ற பதிவுடனான காணொளியொன்று பகிரப்படுகின்றது. ஆனால் இந்தக் காணொளியும் கடந்த 2018 இல் இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி அனர்த்தத்தின் போது எடுக்கப்பட்ட காணொளியாகும்.
இது போன்று பல காணொளிகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. எனினும் இவை எந்தவித உறுதிப்படுத்தல்களும் இல்லாது மக்களை தவறான விதத்தில் வழிநடத்தும் என்பதையும், மக்கள் மத்தியில் வீண் அச்சத்தை உருவாக்கும் என்பதையும் factseeker சுட்டிக்காட்டுகின்றது.