கடன் ஒப்பந்த அடிப்படையிலேயே உலக வங்கி 200 மில்லியன் டொலரை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொண்டது

இக் கடன் ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் K.M. மகிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
by Anonymous |
நவம்பர் 13, 2024

உலக வங்கியிடமிருந்து இலங்கை அரசாங்கம் 200 மில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அரசாங்கத்திற்கு சர்வதேச அமைப்புகளின் அதிகபட்ச ஆதரவு கிடைத்துள்ளதால் உலக வங்கியால் இந்த நிதி வழங்கப்பட்டதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து சமூக வலைதளங்களில் அதிகளவில் விவாதிக்கப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
மேலும், உலக வங்கியிடமிருந்து நாங்கள் கடன்களை பெற்றுக்கொள்ளவில்லை என்றும் இது உதவித்தொகையாக கிடைத்தது என்றும் தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆராய்ந்த போது, இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் மறுசீரமைப்புக் கொள்கைகளுக்கு ஆதரவாக உலக வங்கி குழுமத்தின் சர்வதேச வளர்ச்சி சங்கம் (IDA) மூலம் மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக அறிய முடிந்தது. இக் கடன் ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் K.M. மகிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். இவ் வேலைத்திட்டமானது 2023-2024 ஆகிய இரண்டு வருடங்களில் அமுல்படுத்தப்படும் மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட கடன் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் வழக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, உலக வங்கியும் தனது இணையதளத்தில் முழுமையான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் மறுசீரமைப்பு, நிலைப்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்கான (RESET) அபிவிருத்தி கொள்கைகளுக்கு நிதியளிக்கும் (DPF) வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த நிதி உதவி இலங்கைக்கு கிடைத்துள்ளது. இவ் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் 2023 ஆண்டில் செயற்படுத்தப்பட்டதுடன், பிரதான மூன்று துறைகளின் கீழ் ஏழு வேலைத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட்ட பின்னர், 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும். அவ்வொப்பந்தப் பணிகளை நிறைவேற்றியதன் அடிப்படையில், இரண்டாம் கட்டமாக 200 மில்லியன் டொலர் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில் இத் தொகை கடனாகவே வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.
பொருளாதார செய்திகளை தெரிவிக்கும் EconomyNext இணையத்திலும், உலக வங்கியால் வழங்கப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திட்டம் பற்றிய விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இத் தொகையானது கடனாகவே கிடைக்கபெற்றுள்ளது என்பதையும் இது புதிய அரசாங்கத்தின் கீழ் முதல் தடவையாக கிடைத்த கடன் இல்லை என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            