கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் தலைமையில் “தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்தழிக்கும் மாபெரும் புரட்சிப் போராட்டம்” என போலிச்செய்தி பகிரப்படுகின்றது

எதிர் வரும் நாட்களில் போராட்டம் எதுவும் எங்களால் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் FactSeeker யிடம் தெரிவித்தார்.
by Anonymous |
பிப்ரவரி 6, 2025

“தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்தழிக்கும் மாபெரும் புரட்சிப் போராட்டம்” என்ற தலைப்பில் பதிவொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது. இப் போராட்டமானது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெறப்போவதாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.
மிக நீண்ட காலமாக சர்ச்சையில் உள்ள தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினையானது மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ள இந்நிலையில், இப் புகைப்படம் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்ததில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது உத்தியோகப்பூர்வ x மற்றும் முகநூல் பக்கங்களில் இந்த செய்தி போலியானது என பதிவிட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
https://x.com/GGPonnambalam/status/1886335664091713678
https://www.facebook.com/photo?fbid=122132663036574891&set=a.122118766076574891
மேலும், இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் FactSeeker வினவிய போது, “எனது தலைமையில் தையிட்டி திஸ்ஸ விகாரையை இடிக்கப்போவதாக பகிரப்படும் புகைப்படம் முற்றிலும் பொய்யானது என்றும், எதிர் வரும் நாட்களில் போராட்டம் எதுவும் எங்களால் ஒழுங்குபடுத்தப்படவில்லை” என்றும் தெரிவித்தார்.
ஆகவே, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்தழிக்கும் மாபெரும் புரட்சிப் போராட்டம் இடம்பெறப் போவதாக பகிரப்படும் புகைப்படத்துடனான பதிவானது உண்மைக்கு புறம்பானது என்பதையும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் எந்தவொரு போராட்டமும் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.