ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரகம் இலங்கையில் தேர்தல் கணக்கெடுப்பொன்றை நடத்தியதாக போலிச்செய்தி

'ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் தேர்தல் கருத்துக் கணிப்புகள் எதனையும் நடத்தவில்லை. பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளது'
by Anonymous |
ஜூலை 19, 2024

இலங்கையில் தேர்தல் ஒன்றினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தற்போதைய சூழ்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதரகம் இலங்கையில் தேர்தல் கருத்துக்கணிப்பு ஒன்றினை முன்னெடுத்துள்ளதாகவும், அதில் அநுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி தற்போது முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக ‘லங்கா ஈ நியூஸ்’ இணையதளத்தில் செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அந்தச் செய்தியில், கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு அமைய வாக்காளர் விருப்பங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் காட்டுவதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்காளர்களில் 53 சதவீதமானவர்கள் திசைகாட்டி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இரண்டாவது இடத்தில் சஜித் பிரேமதாச 24% வாக்குகளை பெற்றுள்ளார் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 6% வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 5% க்கும் குறைவான மக்கள் ஆதரவை பெற்றுள்ளார் எனவும் ‘லங்கா ஈ நியூஸ்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கணிசமான எண்ணிக்கையிலான வாக்காளர்கள் (12%) இன்னும் எந்தக் கட்சியை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்கவில்லை எனவும், இருப்பினும் திசைகாட்டி கட்சியின் மீதான நம்பகத்தன்மை மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுவதற்கும் நாட்டின் செழிப்பை மேம்படுத்துவதற்கும் உள்ள அர்ப்பணிப்பு காரணமாக வாக்காளர்கள் மத்தியில் NPP கட்சி செல்வாக்கு செலுத்துவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதரகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ‘லங்கா ஈ நியூஸ்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் factseeker இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திலும், அவர்களது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்திலும் ஆராய்ந்த போது அவர்கள் அவ்வாறான அறிவிப்புகள் எதனையும் விடுத்திருக்கவில்லை.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதரகத்தின் ஊடக பிரிவிடம் factseeker வினவியபோது தம்மால் அவ்வாறான எந்தவொரு ஆய்வினையும் முன்னெடுக்கவில்லை எனவும், இது முற்றிலும் போலியான செய்தி எனவும் உறுதிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதரகத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இது குறித்து அறிவிப்பொன்றையும் விடுத்துள்ளனர். அதில், ‘ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் தேர்தல் கருத்துக் கணிப்புகள் எதனையும் நடத்தவில்லை. பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளது ‘ எனவும் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதரகத்தினால் இலங்கையில் தேர்தல் குறித்த கணக்கெடுப்பு ஒன்றினை நடத்தியதாக ‘லங்கா ஈ நியூஸ்’ தெரிவித்துள்ள செய்தி போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            