ஏப்ரல் 15 ஆம் திகதி விடுமுறை தினமென பகிரப்படும் போலிச்செய்தி

கடந்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி (2024.04.10) அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் திரிபுபடுத்தப்பட்ட புகைப்படமே இவ்வாறு பகிரப்படுகின்றது.
by Anonymous |
ஏப்ரல் 10, 2025

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்ததாக சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகள் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது. அரச தகவல் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றின் புகைப்படத்தினுடனான பதிவுகளே இவ்வாறு பகிரப்படுகின்றன.
பகிரப்பட்ட அவ்வறிக்கையை அவதானித்ததில் அதில் திகதி மற்றும் கையொப்பமிடும் பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், இது குறித்து ஆராய்ந்த போது, இது கடந்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி (2024.04.10) வெளியிடப்பட்ட அறிக்கையின் திரிபுபடுத்தப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிந்தது.
2025 ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை அரசாங்கம் இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை. அத்துடன், இந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும் இது தொடர்பான அறிவிப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்படவில்லை என்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச். எஸ்.கே.ஜே.பண்டார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆகவே, தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி விடுமுறை தினம் என அரசாங்கம் அறிவித்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற பதிவுகள் உண்மைக்கு புறம்பானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகின்றது.