“எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசின் கீழ் கொண்டு வர நேரிடும்” என ஜனாதிபதி தெரிவித்ததாக பகிரப்படும் போலிச் செய்தி

இச் செய்தி முற்றிலும் பொய்யானது என தேசிய மக்கள் சக்தியின் ஊடக பிரிவினர் FactSeeker க்கு தெரிவித்தனர்.
by Anonymous |
மார்ச் 3, 2025

“எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசின் கீழ் கொண்டு வர நேரிடும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்ததாக புகைப்படத்துடனான செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
“Esana” செய்தி தளத்தில் வெளியிட்டது போன்ற பதிவே இவ்வாறு பகிரப்பட்டுவருகின்றன. இது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட அப் பதிவில் “அதிக செலவு செய்தால் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசின் கீழ் கொண்டு வர நேரிடும், அதிக கொடுப்பனவுகளை கொடுக்க முடியாது” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான செய்தி “Esana” செய்தி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதா என factseeker ஆராய்ந்து பார்த்ததில் இவ்வாறான செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. மேலும் இப் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் 2024.02.06 அன்று “Esana” செய்தி தளத்தினால் வெளியிடப்பட்ட வேறொரு செய்தியின் புகைப்படமாகும். ஆகவே. இப் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் வேறொரு செய்தியில் பயன்படுத்தப்பட்ட புகைப்படத்தை திரிபுப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
மேலும், இச் செய்தி அரசுத் தரப்பிலோ, ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்களிலோ அல்லது பிரதான செய்தித்தளங்களிலோ வெளியிடப்பட்டுள்ளதா என ஆராய்ந்ததில், அவ்வாறு எதுவும் வெளியாகவில்லை என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் ஊடக பிரிவினரிடம் FactSeeker வினவிய போது, இச் செய்தி முற்றிலும் பொய்யான செய்தி என தெரிவித்தனர்.
ஆகவே, “எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசின் கீழ் கொண்டு வர நேரிடும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்ததாக சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.