எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் புதிய நாணயத்தாள்கள் வருமாயின் அது எவ்வாறு ?

100 ரூபாய் தாள்கள் இருமாதங்களுக்கு ஒருமுறையும் 5000 ரூபாய் தாள்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறையும் புதுப்பிக்கப்படுகின்றன.
by Anonymous |
நவம்பர் 5, 2024

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வெளியிடப்படலாம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்த கருத்து தொடர்பில் விமர்சன பதிவுகள் சில சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது. அவை பல்வேறு விமர்சனங்களுடன் பகிரப்படுவதால் FactSeeker இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தது.
கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் வணிக பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய பின்வருமாறு பதிலளித்தார்,
“இலங்கை மத்திய வங்கி பழைய நாணயத் தாள்களை அழித்து புதிய நாணய த் தாள்களை அச்சிடுவது வழக்கமான செயல்முறை ஆகும். இது புதிய பணத்தை அதிகரிக்க அல்ல, பழையவற்றை அழித்து புதிதாக வெளியிடும் நடைமுறையாகும். எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் நாணயத்தாள்கள் வரக்கூடும், இது சாதாரண நடைமுறை ஆகும்.” என்று அவர் தெரிவித்தார்.
LINK :-https://www.youtube.com/watch?v=xThOaC4w4HU&t=210s
அதன்படி, பழைய/பயன்பாட்டுக்கு தகாத நாணயத்தாள்களை மாற்றி புதிய நாணயத்தாள்களை வெளியிடும் செயல்முறை தொடர்பில் FactSeeker ஆராய்ந்தது.
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின்படி, இலங்கையில் நாணயத்தை வெளியிடுவதற்கு இலங்கை மத்திய வங்கிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி,இலங்கையின் நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்களை உருவாக்குதல்,அச்சிடுதல் மற்றும் விநியோகம் ஆகிய பணிகள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பொதுத் தேவைகள் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை மத்திய வங்கி போதுமான நாணயங்கள் மற்றும் நாணயத்தாள்களை கையிருப்பில் வைத்துள்ளது. இப்பணம் பின்னர் வணிக வங்கிகளின் கையிருப்பாக மத்திய வங்கிக்கு மீண்டும் திரும்புகின்றது.
இந் நாணயத் தாள்கள், நாணயத்தாள் பரிசோதனை இயந்திரங்கள் மூலம் சரிசெய்யப்பட்டு, எண்ணப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன. பயன்பாட்டிற்கு பொருந்தாத நாணயத்தாள்கள் இந்த செயல்முறையிலேயே சிறு துண்டுகளாக வெட்டி அழிக்கப்படுகின்றன. பயன்பாட்டுக்கு தகுந்த நாணயங்கள் மீண்டும் வணிக வங்கிகளுக்கு வெளியிடப்படுகின்றன.
இது குறித்து இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தனவிடம் FactSeeker வினவிய போது, இந்த வழக்கமான பண நாணய முகாமைக்காக, இலங்கை மத்திய வங்கி பயன்பாட்டுக்கு தகாத தாள்களை அழித்து அவற்றுக்கு பதிலாக புதிய நாணயத்தாள்களை வெளியிடுகின்றது என்று தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் நாணயத்தைப் பயன்படுத்தும் முறைமைக்கு அமைய சில நாணயத்தாள்கள் விரைவாக பழுதடைகின்றது என்றும் 100 ரூபாய் தாள்கள் இருமாதங்களுக்கு ஒருமுறையும் 5000 ரூபாய் தாள்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறையும் புதுப்பிக்கப்படுகின்றன என்றும் மத்திய வங்கி மூன்று ஆண்டுகளுக்குத் தேவையான அளவு நாணயங்களை தக்க வைத்திருப்பதாவும் புதிய நாணயங்களை விநியோகிக்க சுமார் ஆறு மாத காலம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய நிதி அமைச்சரும் அல்லது மத்திய வங்கியின் ஆளுநரும் பொறுப்பேற்றபின், அவர்களுடைய கையொப்பத்தின் மாதிரி (specimen signature) பெறப்பட்டு, இங்கிலாந்தில் உள்ள ” டீலாரூ” (de la Rue) நிறுவத்திற்கு அனுப்பப்படும் என்றும் புதிய நாணயத் தாள்களை அச்சிடும்போது, அந்தக் கையொப்ப மாதிரிகள் பயன்படுத்தப்படும் என்றும் டபிள்யூ.ஏ.விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.
ஆகவே, எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் வெளியிடப்படும் பட்சத்தில் அவை இது புதிய பணத்தை அதிகரித்தல் என கருதப்பட முடியாது எனவும், பழைய பணத்தை அழித்து புதிதாக வெளியிடும் நடைமுறையாகும் என்பதாகவும் என factseeker வலியுறுத்துகின்றது.