ஊடகங்களையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்தும் ‘ எல்ல – வெல்லவாய’ விபத்து தொடர்பான AI புகைப்படம்

ஊடகங்களிலும் சமூக வலைத்தள பக்கங்களிலும் மற்றும் இணையதளங்களிலும் பகிரப்படும் இந்த புகைப்படமானது AI மூலமாக உருவாக்கப்பட்ட போலியான புகைப்படம் என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.
by Anonymous |
செப்டம்பர் 8, 2025

பதுளை, எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல – வெல்லவாய வீதியில் கடந்த வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட பேருந்து விபத்து தொடர்பில் குறிப்பிடத்தக்க ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்படுகின்றது. அதே புகைப்படத்தை பிரதான ஊடகங்களும், இணைய ஊடகங்களும் பிரசுரித்துள்ளன . குறிப்பாக கடந்த சனிக்கிழமை ( 06.09.2025) வீரகேசரி நாளிதழின் முதல் பக்கத்திலும், ஞாயிற்றுக்கிழமை (07.09.2025) தினக்குரல் வார இதழின் மூன்றாம் பக்கத்திலும் அப்புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், லங்காலீடர் இணையதளத்திலும் அதே புகைப்படத்துடன் விபத்து தொடர்பான செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளதை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில், குறித்த புகைப்படத்தை ஆராய்ந்ததில் அந்த புகைப்படம் உண்மைக்கு புறம்பான பல தன்மைகளை கொண்டுள்ள காரணத்தினால், பகிரப்படும் அந்த புகைப்படம் குறித்து தரவு பரிசோதனை செய்த factseeker, இந்த புகைப்படம் AI தொழிநுட்ப முறையில் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படம் என்பதை கண்டறிந்தது,
AI தொழிநுட்ப முறையில் உருவாக்கப்பட்டு பகிரப்பட்ட புகைப்படம் இங்கே :
இந்த புகைப்படத்தின் தன்மைகளை ஆராய்ந்த போது,
1 – பூகோள அமைவிடம்
விபத்து இடம்பெற்ற இடத்தின் பூகோள அமைவிடத்தை அவதானித்தபோது, விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் ‘ எல்ல–வெல்லவாய ‘ பிரதான வீதியின், 23வது மற்றும் 24வது கிலோமீட்டருக்கு இடைப்பட்ட பகுதியை அவதானித்ததில், factseeker AI என கண்டறிந்த புகைப்படத்திற்கு முற்றிலும் மாறான விதத்தில் உண்மையான சூழல் காணப்படுகின்றது. புகைப்படத்தில் அது செங்குத்தான பள்ளத்தாக்கு போன்று காணப்படுகின்றது, ஆனால் உண்மையான காணொளிகளை அவதானிக்கையில் அப்பகுதி செங்குத்தான பள்ளத்தாக்கு போன்று காணப்படவில்லை.
2 -இடர் முகாமைத்துவ பாதுகாப்புக் குழு
குறித்த AI புகைப்படத்தில் இடர் முகாமைத்துவ பாதுகாப்புக் குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபடுவது போன்று காணப்படும் புகைப்படங்கள் பொதுவாக இலங்கையின் இடம் முகாமைத்துவ குழுக்களின் ஆடைகளை ஒத்ததாக காணப்படவில்லை. குறித்த சம்பவத்தின் உண்மையான காணொளிகளை அவதானித்த போது, சம்பவ இடத்தில் விபத்துக்குள்ளான பொதுமக்களை பாதுகாக்க ஈடுபட்ட இராணுவ குழுவினர் வேறு விதமான ஆடைகளில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
3-மருத்துவ (காவு) அவசர ஊர்தி
மேலும் AI மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படத்தில் காணப்படும் மருத்துவ (காவு) அவசர ஊர்தியின் புகைப்படங்களை சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட உண்மையாக காணொளிகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது இரண்டுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் இருப்பதை அவதானிக்க முடிந்தது.
4- காலம்
குறித்த விபத்து இடம்பெற்றபோது இரவு 9.30 மணி இருக்குமென பிரதான ஊடகங்கள் தெரிவித்துள்ளன, அந்த நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் தமது தொலைபேசிகளின் மூலமாக எடுத்து பகிர்ந்துள்ள காணொளிகளும் நள்ளிரவு வேலையையே காட்டுகின்றன. எனினும் AI மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படத்தில் பிற்பகல் வேளையில் அனர்த்தம் இடம்பெற்றதைப்போன்று காணப்படுகின்றது.
5 – பார்வையாளர்கள்:
அனர்த்தம் இடம்பெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என பகிரப்படும் இந்த புகைப்படத்தில் பொதுமக்கள் சுற்றிநின்று பார்வையிடுவது போன்று உள்ளது, அதில் பொதுமக்கள் மரங்களின் மேல் நிற்பதைப்போன்று பொருத்தமில்லாத வகையில் காட்சி அமையப்பெற்றுள்ளது.
எனவே, அனர்த்தம் இடம்பெற்ற நிகழ்வுக்கும் புகைப்படத்திற்கும் எந்த விதத்திலும் பொருத்தமில்லாத வகையில் இயற்கைக்கு மாறானதாகவே இந்த புகைப்படம் அமையப்பெற்றுள்ளது.
மேலதிக உருதிப்பாட்டுக்காக இந்த புகைப்படம் AI தொழிநுட்ப கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதா என HIVE MODERATION மூலமாக ஆராய்ந்து பார்த்ததில் இது AI புகைப்படம் என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது.
ஆகவே, பிரதான ஊடகங்களிலும் சமூக வலைத்தள பக்கங்களிலும் மற்றும் இணையதளங்களிலும் பகிரப்படும் இந்த புகைப்படமானது AI மூலமாக உருவாக்கப்பட்ட போலியான புகைப்படம் என்பதை factseeker உறுதிப்படுத்துவதுடன், இவ்வாறான புகைப்படங்களை பிரதான ஊடகங்கள் பிரசுரிக்க முன்னர் தரவு சரிபார்த்து பிரசுரிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றது.