இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் தொடர்பான போலித்தகவல்கள்

ஈரான்- இஸ்ரேல் தாக்குதலின் போதும் போலியான காணொளிகள், தவறாக பகிரப்படும் காணொளிகள் மற்றும் AI தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் பல சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.
by Anonymous |
ஏப்ரல் 18, 2024

ஈரான்- இஸ்ரேல் மீது ஆளில்லா விமான ஏவுகணைகளை பயன்படுத்தி கடந்த 14ஆம் திகதி தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையில்,சர்வதேச ஊடகங்களிலும் இலங்கையின் தேசிய ஊடகங்களிலும் இந்த செய்தி முக்கியம் பெற்றிருந்தன.
தாக்குதலின் பின்னர்,தற்போது வரையில் போர் பதற்றம் நிலவுகின்ற நிலையில் சமூக வலைதளங்களில் இது குறித்த செய்திகள்,காணொளிகள் பகிரப்பட்டு வருகிறன.
இந்த தாக்குதல் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள், காணொளிகள் ஊடகங்களினால் வெளியிடப்பட்டிருந்தாலும், போலியான செய்திகள், தவறாக பகிரப்படும் பல காணொளிகள் (misleading videos) மற்றும் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
அவ்வாறு அதிகளவில் பகிரப்பட்ட சில காணொளிகள் மற்றும் புகைப்படங்களை அடையாளம் கண்டு factseeker இங்கே தெளிவுபடுத்தியுள்ளது.
குறிப்பாக,இரான்-இஸ்ரேல் மீது ஏவுகளை தாக்குதலை நடத்தியதை அடுத்து பாலஸ்தீனத்தில் உள்ள அல்-அக்ஸா பள்ளிவாசல் முன்பாக பாலஸ்தீன மக்கள் மகிழ்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக கூறும் காணொளியொன்று சமூக வலைதளங்களில், குறிப்பாக எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
ஈரான்- இஸ்ரேல் மீது ஆளில்லா விமான ஏவுகணைகளை பயன்படுத்தி கடந்த 14ஆம் திகதி தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையில் அன்றைய இரவு இடம்பெற்ற நிகழ்வாக இது பகிரப்பட்டு வருகின்ற போதிலும் அவ்வாறு பகிரப்படும் செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை.
https://www.youtube.com/watch?v=LdFMTm1QcNM
அல்- அக்ஸா பள்ளிவாசல் முன்பாக பாலஸ்தீன மக்கள் ஒன்றுகூடி நிகழ்வொன்றை நடத்திய சம்பவமானது இம்மாதம் 5ஆம் திகதி இடம்பெற்றதாகும். அதன்போது பதிவாகிய காணொளியையே தவறாக பலர் பகிர்ந்து வருகின்றனர்.
அதேபோல், ஏமன் நாட்டிலிருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறும் காணொளி ஒன்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.
எனினும் இந்த காணொளி இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது எடுக்கப்பட்ட ஒன்றல்ல. இது கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி சமூக வலைதளங்களின் வெளியிடப்பட்ட காணொளியாகும்.
https://www.youtube.com/watch?v=YMTvAZM-Hls
மேலும், இஸ்ரேல் மீது ஏவப்பட்டிருக்கும் ஆளில்லா விமான ஏவுகணைகள் எனக் கூறும் புகைப்படம் ஒன்றும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
எனினும் இந்த புகைப்படம் AI தொழிநுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட புகைப்படமாகும்.
போலிச் செய்திகள்,போலியாக உருவாக்கப்படும் புகைப்படங்கள், காணொளிகள் என்பன தொடர்ச்சியாக சமூகத்தில் பாரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை factseeker தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில்,ஈரான்- இஸ்ரேல் தாக்குதலின் போதும் போலியான காணொளிகள், தவறாக பகிரப்படும் காணொளிகள் மற்றும் AI தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் பல இவ்வாறு சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து சமூகத்தை தவறாக வழிநடத்தி வருகின்றது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.