இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

இக் காணொளியை வெளியிட்ட YouTube தளத்தில், இது செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட கற்பனைத் திரைத்தொகுப்பு (fictional re-enactment) என குறிப்பிடப்பட்டுள்ளது.
by Anonymous |
ஜூன் 9, 2025

சமீப நாட்களாக உலகளாவிய அளவில் அதிகம் பேசப்பட்டுவரும் புர்க்கினா பாசோ (Burkina Faso) நாட்டின் தலைவர் இப்ராஹிம் ட்ரொரே, உலக அரசியல் குறித்து உரையாற்றும் காணொளிகள் சமூக வலைதள பாவனையாளர்கள் மத்தியில் பேசுபொருளாகி வருகின்றது. இந்நிலையில் அவர் இலங்கை குறித்து பேசிய காணொளியென ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படுவதுடன், அந்தக் காணொளி சிங்கள மொழிபெயர்ப்பு விளக்கவுரைகளுடன் பகிரப்படுகின்றது.

ஆகவே இந்த காணொளி குறித்து factseeker கவனம் செலுத்துகையில், அவரது பெயரில் பல காணொளிகள் சமூக வலைதள பக்கங்களில் அவதானிக்க குடிந்தது. அதில் இலங்கை குறித்து அவர் கருத்து தெரிவிக்கும் காணொளியை உன்னிப்பாக அவதானித்த வேளையில் இப்ராஹிம் ட்ரொரேவின் உடல் அசைவுகள், அவர் கதைக்கும் தொனி ஆகியவற்றில் பாரிய வேறுபாடுகள் உள்ளதை factseeker இனால் கணிக்க முடிந்தது. இவை அனைத்தும் செயற்கையாக உருவாக்கப்பட்டதற்கான தன்மையைக் கொண்டிருந்தன.

மேலும், இக் காணொளியை GoogleLens மூலம் ஆராய்ந்ததில், இது “Univers Inspirant” எனும் YouTube பக்கத்தில் கடந்த மே 25ஆம் திகதி வெளியிடப்பட்ட 25 நிமிடங்கள் கொண்ட ஆங்கில மொழியிலான காணொளியின் ஒரு பகுதியென கண்டறிய முடிந்தது.
அந்த YouTube காணொளியின் விளக்கக் குறிப்பில் (description) “IMPORTANT NOTICE” எனும் தலைப்பில் பின்வரும் தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது:
“முக்கிய அறிவிப்பு: இந்த வீடியோ முழுமையாக பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட கற்பனையான உள்ளடக்கமாகும். இதில் காணப்படும் சம்பவங்கள் உண்மை நிகழ்வுகளால் தூண்டப்பட்டதாகத் தோன்றலாம்; எனினும், இதில் உள்ள அனைத்து நிகழ்வுகள், உரையாடல்கள் மற்றும் கதாபாத்திரங்கள் கற்பனையே ஆகும். இப்ராஹிம் ட்ரொரேவின் வாழ்க்கையால் சிந்தனை பெறப்பட்டிருந்தாலும், காணப்படும் உரைகள் மற்றும் சம்பவங்கள் உண்மையானவை அல்ல. இது முழுமையாக கலைநயம் சார்ந்த ஒரு கற்பனைத் தொடர் ஆகும். இதில் காட்டப்படும் எந்தவொரு சம்பவமும் உண்மையான நபர்களையோ நிறுவனங்களையோ குறிக்கவில்லை. இந்த வீடியோ அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காக அல்ல; கலைப்பூர்வமான பொழுதுபோக்கிற்காக மட்டுமே தயாரிக்கப்பட்டதாகும். இதை பார்வையிடும் அனைவரும் தனிப்பட்ட முறையில் மேலதிக ஆராய்ச்சி செய்வது விரும்பத்தக்கது.”

மேலும், YouTube காணொளியில் தொடக்கத்திலேயே இது ஒரு “கற்பனை மற்றும் திரிபுபடுத்தப்பட்ட காணொளி” என எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்ததும் கவனிக்கப்பட்டது.

ஆகவே, இப்ராஹிம் ட்ரொரே உலக அரசியல் குறித்து உரையாற்றுவதாகக் பகிரப்படும் இக் காணொளி AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனைத் திரைத்தொகுப்பு (fictional re-enactment) காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.
 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            