இலங்கை -இந்தியாவுக்கு இடையில் எல்லை தொடர்பான உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்படவில்லை

இந்தியாவின் பிரசித்திபெற்ற நாளிதழான 'The Hindu' வெளியிட்டுள்ள செய்தி உறுதிப்படுத்தப்பட்ட செய்தி அல்ல எனவும், இந்த செய்தி தவறானது எனவும் FactSeeker தெரிவிக்கின்றது.
by Anonymous |
ஜூலை 3, 2024

பாக்கு நீரிணை கடற்பரப்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை தொடர்பான விவகாரங்கள் மற்றும் கச்சதீவு பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையில் விரிவான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக இந்தியாவின் பிரசித்திபெற்ற நாளிதழான ‘The Hindu’ கடந்த மாதம் (28) செய்தி வௌியிட்டிருந்தது.
எவ்வாறாயினும், இவ்வாறு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பான விபரங்கள் வௌியிடப்படவில்லை என இந்திய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து இலங்கையின் ஊடகங்களிலும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இது குறித்த விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வெளிவர ஆரம்பித்ததை அடுத்து factseeker இது குறித்து ஆராய்ந்து பார்த்தது.
இலங்கை- இந்தியாவிற்கு இடையில் இது குறித்த உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டுள்ளதா என வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் factseeker வினவியபோது அவ்வாறான உடன்படிக்கைகள் எதுவும் செய்துகொள்ளப்படவில்லை எனவும், அதற்கான அறிக்கைகள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரியிடம் நேரடியாக factseeker வினவிய போது, “இந்தியாவுடன் புதிய ஒப்பந்தங்கள் எதனையும் தாம் மேற்கோள்ளவில்லை, அது தொடர்பிலான எவ்வித பேச்சுவார்தைகளும் இடம்பெறவில்லையென” வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “இலங்கையைப் பொறுத்த வரையில் இவை 50 வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் உயர் மட்டத்திலும் இருதரப்பு உடன்படிக்கைகளிலும் கலந்துரையாடப்பட்டு இறுதி செய்யப்பட்ட விடயங்கள்” என்றார்.
factseekerக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, பாக்கு நீரிணை கடற்பரப்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான விவகாரங்கள் மற்றும் கச்சதீவு பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையில் விரிவான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக இந்தியாவின் பிரசித்திபெற்ற நாளிதழான ‘The Hindu’ வெளியிட்டுள்ள செய்தி உறுதிப்படுத்தப்பட்ட செய்தி அல்ல எனவும், இந்த செய்தி தவறானது எனவும் FactSeeker தெரிவிக்கின்றது.