இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் பெயரில் இயங்கும் போலி facebook பக்கம்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் என்பவரின் பெயரில் இயங்கும் Facebook பக்கம் போலியானது என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
by Anonymous |
மே 20, 2025

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) இன் பெயரில் facebook பக்கமொன்று சமீப காலமாக இயங்கி வருகின்ற நிலையில் அது தொடர்பில் சில சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளதை அடுத்து factseekerஇற்கு கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கு அமைய இதன் உண்மைத்தன்மையை factseeker ஆராய்ந்து பார்த்தது.
அவரது பெயரில் இயங்கிவரும் facebook பக்கத்தை அவதானித்ததில் அதில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் உத்தியோகபூர்வ X தளத்தில் அவர் இடும் பதிவுகளே இந்த facebook பக்கத்திலும் உள்ளதை அவதானிக்க முடிந்தது. அவரது உத்தியோகபூர்வ X பக்கம் இங்கே,
மேலும், ஜூலி சங் பெயரில் இயங்கும் அந்த முகநூல் பக்கத்தை 6000 க்கும் மேற்பட்டோர் பின்தொடர்வதுடன், அப்பக்கத்தில் பகிரப்படும் ஒவ்வொரு பதிவிலும் பயனர்கள் தமது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த facebook பக்கம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் 21 ஆம் திகதி உருவாக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்தே இந்த பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்துள்ளது.
இந்நிலையில் குறித்த facebook கணக்கை உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ facebook பக்கத்தை ஆராய்ந்ததில் அதில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் பெயரில் இயங்கும் facebook பக்கம் போலியானது என்பதை அறிவித்துள்ளனர்.
மேலும், இது குறித்து அமெரிக்க தூதரகத்தின் ஊடக பொறுப்பதிகாரி கோரி பிக்கலிடம் factseeker பிரத்தியேகமாக வினவியபோது அவர் குறித்த facebook கணக்கு போலியானது என்பதை உறுதிப்படுத்தினார். அத்துடன் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இது குறித்து ஊடக அறிக்கை ஒன்றையும் வழங்கியுள்ளது.
ஆகவே, அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கையை அடுத்து, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் பெயரில் முன்னெடுக்கப்படும் facebook பக்கம் போலியானதென்பதை FactSeeker உறுதிப்படுத்துவதுடன், இத்தகைய போலியான சமூக ஊடக கணக்குகளினால் தவறான தகவல்கள் பரவக்கூடிய நிலைமை உள்ளதால், பொதுமக்கள் அவற்றை நம்புவதை தவிர்க்குமாறு FactSeeker அறிவுறுத்துகிறது.